கைது 
செய்திகள்

பணம் செலுத்தும் மெஷினில் கள்ள நோட்டுகளை போட்ட டிராவல்ஸ் உரிமையாளர் கைது

பாரிமுனை வங்கியில் பணம் செலுத்தும் மெஷினில் கள்ளநோட்டுகளை போட்ட டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

ராயபுரம்:

கொத்தவால்சாவடியை சேர்ந்தவர் சத்யபிரகாஷ். டிராவல்ஸ் உரிமையாளரான இவர் நேற்று தங்கசாலையில் உள்ள கோடக் மகேந்திரா வங்கியில் ரூ.40 ஆயிரம் பணத்தை போட்டுள்ளார்.

பணம் செலுத்தும் எந்திரம் வழியாக சத்யபிரகாஷ் இந்த பணத்தை செலுத்தியுள்ளார். இதனை ஆய்வு செய்த வங்கி அதிகாரிகள் அதில் ரூ.2500 மதிப்பிலான 5 கள்ள நோட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதுபற்றி கொத்தவால்சாவடி போலீசில் வங்கி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து சத்யபிரகாசை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கள்ள நோட்டுகள் எப்படி வந்தது என்பது பற்றி எதுவும் தெரியாது என்று கூறினார்.

இருப்பினும் கள்ள நோட்டை வைத்திருந்த குற்றத்துக்காக சத்யபிரகாசை போலீசார் கைது செய்தனர். அவர் வங்கியில் செலுத்திய ரூ.40 ஆயிரம் பணத்தில் ரூ.2500 கள்ள நோட்டை தவிர்த்து மீதம் உள்ள பணத்தை தனியாக எடுத்து வைத்துள்ள வங்கி அதிகாரிகள், அந்த பணத்தின் நம்பகத்தன்மை குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

அந்த நோட்டுகளும் கள்ள நோட்டுகளாக இருக்கலாமோ என்கிற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.