திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைய அனுமதி இல்லை.
சபரிமலை அய்யப்பன் பிரம்மச்சாரி என்பதால் இந்த ஐதீகம் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டும் இளம் வக்கீல்கள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கில் கேரள அரசு, சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் ஆகியவை பிரமாண வாக்கு மூலம் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் பானுமதி, அசோக்பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. நேற்று நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக ஒரு உத்தரவு பிறப்பித்தனர்.
அதில், அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு தடை விதிக்கும் வழக்கம், பாலின பாரபட்சமானதா? ஆண், பெண் உரிமைக்கு எதிரானதா? என்பதை அரசியல் சாசன அமர்வு முடிவு செய்யும். எனவே இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுகிறது என தெரிவித்தனர்.
எனவே சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்பது குறித்து இனி சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு முடிவு செய்யும். இது குறித்து நேற்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரையர் கோபாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சபரிமலை அய்யப்பன் பிரம்மச்சாரி ஆவார். அவரை தரிசிக்க பெண்களுக்கு அனுமதியில்லை. காலம் காலமாக இதனை கடைபிடித்து வருகிறோம். இப்போது திடீரென இந்த ஆச்சாரத்தை மாற்ற வேண்டுமென்று கூறுகிறார்கள். இதற்காக கோர்ட்டுக்கும் சென்றுள்ளனர்.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்று கோர்ட்டு கூறினாலும் ஆச்சாரம் மற்றும் அனுஷ்டானங்களை கடை பிடிக்கும் குடும்பத்து பெண்கள் சபரிமலைக்கு வர மாட்டார்கள்.
சபரிமலையை ஒருபோதும் தாய்லாந்து நாட்டை போல ஆக்க மாட்டோம். இது புண்ணிய பூமி. இங்கு ஒரு போதும் ஆச்சார, அனுஷ்டானங்களை மீற விட மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.