செய்திகள்

சேலம் மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் போக்குவரத்து ஊழியர்கள் இடமாற்றம்

சேலம் மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் போக்குவரத்து ஊழியர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சேலம்:

ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 4-ந் தேதி முதல் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதையொட்டி மாற்று டிரைவர்கள் மூலம் குறைந்த அளவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் வழக்கமாக 13 டெப்போக்கள் மூலம் 800-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படும். ஆனால் தற்போது சேலம் மாநகரில் 75 சதவீதம் டவுன் பஸ்களும், புறநகரில் 40 சதவீதம் பஸ்களும் இயக்கப்படுகின்றன .புறநகர் பஸ்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பு கருதி நிறுத்தப்படுகிறது.

வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் பஸ்களும் குறைந்த அளவே இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் தவித்து வருகிறார்கள். வழக்கத்தைவிட தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. இதனால் அந்த பஸ்களில் கூட்டம் அலை மோதுகிறது.

இதற்கிடையே போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். நேற்று மண்டல அலுவலகம் முன்பு ஊழியர்கள் குடும்பத்துடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று அதிகாலை தொழிற்சங்க நிர்வாகிகள் 4 பேரை வீடு புகுந்து போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களிடம் உறுதிமொழி எழுதி வாங்கி விட்டு போலீசார் திருப்பி அனுப்பினர்.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கண்டக்டர்கள், டிரைவர்கள் சிலரை மாவட்டத்தில் உள்ள வேறு டெப்போக்களுக்கு நேற்று இரவு அதிரடியாக இடமாற்றம் செய்து உள்ளனர். இதில் குறிப்பாக வேலைக்கு செல்பவர்களை தடுப்பவர்கள் மற்றும் போராட்டத்தை தூண்டுபவர்களை வேறு டெப்போக்களுக்கு மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

மேட்டூர் டெப்போவில் டிரைவராக பணிபுரியும் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த செம்பான் என்பவரை ஆத்தூர் டெப்போவுக்கு மாற்றி உள்ளனர். இதேபோல மேலும் பலரை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் டிரைவர்கள், கண்டக்டர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிற்சங்க மண்டல செயலாளர் செல்வகுமார் கூறுகையில்:

நாளுக்கு நாள் அரசு பஸ்கள் இயக்கம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் ஊழியர்களை இடமாற்றம் செய்து மிரட்டி வருகிறார்கள். இதற்கெல்லாம் ஊழியர்கள் அஞ்சமாட்டார்கள்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலை நிறுத்தம் தொடரும். இன்று கோரிமேட்டில் உள்ள தொழிலாளர் நல அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.