நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள அரசு போக்குவரத்து கழக கட்டிடம் இன்று அதிகாலையில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 7 டிரைவர்கள், கண்டக்டர் என 8 பேர் உயிரிழந்தனர். சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
பணிமனை இடிந்து விழுந்ததையடுத்து பொறையார் பணிமனையில் இருந்து எந்த பேருந்தும் இயக்கப்படவில்லை. இதேபோல் மயிலாடுதுறை பணிமனை மற்றும் சீர்காழி பேருந்து நிலையத்திலும் பேருந்துகளை இயக்காமல் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதி கேட்டு அவர்களின் குடும்பத்தினர் பொறையார் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அவர்களிடம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்.