செய்திகள்

போக்குவரத்து கழக ஊழியர்கள் தடையை மீறி மறியல்: ஆயிரக்கணக்கானவர்கள் கைது

சேலத்தில் இன்று போக்குவரத்து கழக ஊழியர்கள் தடையை மீறி மறியலில் ஈடுப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு பஸ்சில் ஏற்றி செல்லப்பட்டனர்.

மாலை மலர்

சேலம்:

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இன்று 5-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குறைந்த பட்ச ஊதியமாக 19 ஆயிரத்து 500 வழங்க வேண்டும், அனைவருக்கும் 2,57சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்த போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் சார்பில் போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி அளிக்க வில்லை.

இதனால் அவர்கள் தடையை மீறி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதனால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு பஸ்சில் ஏற்றி செல்லப்பட்டனர்.இந்த மறியல் போராட்டத்தில் தி.மு.க தொழிற்சங்கமான தொ.மு.ச., ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., பாட்டாளி தொழிற்சங்கம், தே.மு.தி.க.தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பஸ் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டம் குறித்து தொ.மு.ச. தொழிற்சங்கத்தை சேர்ந்த சேலம் மண்டல தலைவர் மணிகூறியதாவது:-

போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் இன்று 5-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.நீதிமன்றம் மற்றும் போலீசார் மூலம் அரசு எங்களை மிரட்டி வருகிறது. சேலம் மாவட்டத்தில் 96 சதவீத பேருந்துகள் ஓடவில்லை. விரைவில் 100 சதவீத பாதிப்பாக மாறும்.

ஒவ்வொரு நாளும், டீசல் செலவு எவ்வளவு, டிக்கெட் மூலம் கட்டண வசூல் எவ்வளவு என்பதை கணக்கிட்டு பார்த்தால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு என்பது தெரிய வரும். சேலம் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு தலா 2 கோடி வீதம் 5 நாட்களுக்கு ரூ.10கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கு தமிழக அரசுதான் காரணம். அரசு பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.எங்கள் கோரிக்கைகளை நிறை வேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.யாருடைய மிரட்டலுக்கும் அடி பணிய மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார். #transportworkers #tamilnews