சென்னை:
தமிழக அரசுக்கும், போக்கு வரத்துக் கழக ஊழியர்களுக்கும் இடையே ஊதிய உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படாததால், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள்.
கடந்த வியாழக்கிழமை தொடங்கிய வேலை நிறுத்தம் இன்று (செவ்வாய்க்கிழமை) 6-வது நாளாக நீடிக்கிறது.
தொ.மு.க., சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி. உள்பட 10 தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் தமிழ்நாடு முழுவதும் முதலில் சுமார் 80 சதவீத பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் மூலம் பிரச்சினையை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கு முழுமையான வெற்றி கிடைக்க வில்லை.
தற்காலிக ஊழியர்களால் 5 சதவீதம் பஸ்களை கூட இயக்க முடியவில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களின் டெப்போக்களில் சுமார் 60 சதவீத பஸ்கள் முடங்கிக் கிடக்கின்றன.
பணிக்கு திரும்பாவிட்டால், அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருந்ததால், இன்று சில ஊழியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 10 தொழிற்சங்கத்தினரும் தங்கள் கோரிக்கையில் உறுதியுடன் உள்ளனர். இதனால் இன்றும் குறைந்த அளவே பஸ்கள் ஓடின.
இதன் காரணமாக பொது மக்களின் அவதி இன்றும் நீடித்தது. வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் உரிய நேரத்தில் பஸ் கிடைக்காமல் தவித்தனர். சென்னையில் பொது மக்கள் நீண்ட நேரம் காத்து நின்ற பிறகே பஸ்களை பிடிக்க முடிந்தது.
பஸ் ஸ்டிரைக் காரணமாக சென்னையில் மின்சார ரெயிலிலும், மெட்ரோ ரெயிலிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெரும்பாலானவர்கள் ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்தனர்.
இதற்கிடையே பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர சென்னை ஐகோர்ட்டு முயற்சி செய்தது. வேலை நிறுத்தத்தை கை விட்டு பணிக்கு திரும்பும்படி 2 தடவை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.
ஆனால் ஐகோர்ட்டு அறிவுறுத்தலை தொழிற்சங்க பிரதிநிதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. பஸ் ஸ்டிரைக் தொடரும், பணிக்கு திரும்ப மாட்டோம் என்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில், புதிய ஒப்பந்தத்தை வலியுறுத்தி இன்று பிற்பகல் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்த போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து போக்கு வரத்து கோட்ட தலைமை அலுவலகங்கள் முன்பும் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற உள்ளது.
குடும்பத்துடன் நடக்கும் ஆர்ப்பாட்டம் பிற்பகலில் நடக்கும் என்று கூறப்பட்டிருந்தாலும் தமிழகத்தின் பல ஊர்களில் இன்று காலையிலேயே பஸ் ஊழியர்களின் குடும்பத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம் பஸ் நிலையம் உள்ளே உள்ள பணிமனை முன்பு போக்கு வரத்து ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் உள்ள 11 மணிமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இதில் பங்கேற்றனர். அவர்கள் பணிமனை முன்பு தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டம் நடந்த இடத்தை சுற்றி பேரிகார்டுகள் வைத்து தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது. டி.எஸ்.பி. முகிலன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை ஆகிய 6 பணி மனைகளில் மொத்தம் 277 பஸ்கள் உள்ளன. இன்று காலை தற்காலிக டிரைவர்கள் மூலம் குறைந்த அளவிலே பஸ்கள் இயக்கப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள 6 பணிமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று காலையிலேயே குடும்பத்துடன் தனியார் பஸ்கள், வேன், ஜீப்களில் காஞ்சீபுரம் பணிமனை முன்பு நடந்த போராட்டத்தில் பங்கேற்க வந்தனர்.
போராட்டத்தில் காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்ட போக்குவரத்து ஊழியர்களின் குடும்பத்தினர் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால் காஞ்சீபுரம் நகரம் பரபரப்பாக காணப்பட்டது.
விருதுநகரில் உள்ள தலைமை போக்கு வரத்து பணிமனை முன்பு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் திரண்டனர். அவர்கள் பணிமனை முன்பு வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ. ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யூ.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
கடலூரில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் திரண்டனர். ஏராளமானோர் கைக் குழந்தையுடன் வந்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கோவையில் சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மண்டல போக்குவரத்து கழக அலுவலகத்தை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து முற்றுகையிட்டனர்.
அவர்கள் தமிழக அரசையும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஊட்டியில் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று தொழிலாளர்கள் குடும்பத்துடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வேலூர் ரங்காபுரத்தில் உள்ள போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு போக்குவரத்து ஊழியர்கள் பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் 500-க்கும் மேற்பட்டோர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஊதிய உயர்வு வழங்கும் வரை எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கோஷம் எழுப்பினர். இதனால் வேலூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலையில் தேனிமலை பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக இன்று காலை 10 மணிக்கு தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு விரைவு போக்கு வரத்து கழகம் முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஜெயவேல் முருகன் தலைமையில் போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் கலந்து கொண்டனர். ஊதிய உயர்வை உடனே வழங்கு, ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்து என அவர்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 154 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் அரசு ஊழியர்கள் சம்மேளனம் சார்பாக பனகல் கட்டிடம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகையில் இன்று அனைத்து தொழிற் சங்கத்தினர் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இன்று பிற்பகலில் பஸ் ஊழியர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதன் காரணமாக பஸ் ஸ்டிரைக் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
அரசு இந்த விஷயத்தில் கவுரவம் பார்க்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் விஜய பாஸ்கர், ‘‘அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை போக்குவரத்து தொழிலாளர்களும் பெறும் வகையில் 2.44 மடங்கு ஊதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்று போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சரின் இந்த கடைசி வேண்டுகோளையும் போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிராகரித்து விட்டது. இதையடுத்து இனி பேச்சுவார்த்தை கிடையாது என்று அறிவித்துள்ள தமிழக அரசு, பணிக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
அதன்படி முதல் கட்டமாக போக்குவரத்து தொழிலாளர்களில் மிகத் தீவிரமாக போராடி வரும் ஊழியர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு வருகிறது. கோவை மண்டல போக்குவரத்து கழகம் மூலம், 11,819 பேருக்கும் மதுரை மண்டல போக்குவரத்து கழகம் மூலம் 4,500 பேருக்கும் நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கும்பகோணம் மண்டல போக்குவரத்து கழகங்களும் விளக்கம் கேட்டு நோட்டீசுகள் அனுப்பியுள்ளன.
போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை போராட்டத்தை தொடர்ந்தால் அரசு சட்ட நடவடிக்கைகளை எடுப்பது பற்றி ஆலோசிக்கும் என்று கூறப்படுகிறது. #TNTransportstrike #Busstrike #tamilnews