சென்னை:
தமிழக அரசு உடனான அனைத்து கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்ததை அறிவித்தபடி மாநிலம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. பல இடங்களில் நேற்றே பேருந்துகள் இயக்கப்படவில்லை. சில இடங்களில் பேருந்துகள் மீது கலவீச்சு தாக்குதல் சம்வங்களும் நடைபெற்றன.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. சில இடங்களில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் பேருந்துகளை இயக்கினர். வேலைநிறுத்தம் என்பதால் மக்கள் பெரும்பாலும் ரெயில், ஆட்டோ உள்ளிட்ட மாற்று வழிகளை தாங்களாக தேர்வு செய்தனர்.
இதனையடுத்து போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடன் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் மதியம் 2.30 மணியளவில் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தோல்வி அடைந்துள்ளதாகவும், 75 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், “மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து 1000 பேருந்துகளை வரவழைத்து சிறப்பாக இயக்கப்படும். அதிக ரெயில்களை இயக்க தென்னக ரெயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சங்கங்களுடன் நாளை நடைபெறும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது” என்றார்.