செய்திகள்

திட்டமிட்டப்படி 15-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

அமைச்சருடன் நடைபெற்ற ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டப்படி 15-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 1½ லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் நடைபெறுவது வழக்கம். 12-வது ஊதிய ஒப்பந்தம் 31-8-2016 அன்றுடன் முடிந்தது. இதைத்தொடர்ந்து 1-9-2016 முதல் அமலுக்கு வரவேண்டிய 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 7-ந் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது.

2-வது கட்ட பேச்சுவார்த்தை சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தொழிற்பயிற்சி மையத்தில் கடந்த 4-ந் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்கவில்லை. அதிகாரிகள் தரப்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. சுமார் 1½ மணி நேரம் நடந்த அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து அன்றையதினம் மாலை சென்னை பல்லவன் இல்லம் சாலையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பேச்சுவார்த்தை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தை தவிர்த்து அனைத்து சங்கங்களும் கலந்துகொண்டன. இந்த கூட்டத்தின் முடிவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தும் வகையில், அவர்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இதையடுத்து போக்குவரத்து துறை மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையிலான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சென்னை பல்லவன் இல்லத்தில் நேற்று மீண்டும் நடைபெற்றது.

போக்குவரத்து துறை சார்பில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் சந்திரகாந்த் காம்ப்ளே மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான அந்த குழுவினர், அண்ணா தொழிற்சங்கம், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களின் சார்பில் கலந்துகொண்ட நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றினால் போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொழிற்சங்க நிர்வாகிகள் மத்தியில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசும்போது, “எந்தவொரு பிரச்சினைக்கும் போராட்டம் என்பது தீர்வாகாது. முதல் கட்டமாக அரசிடம் பேசி ரூ.500 கோடி பணம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. படிப்படியாக ஓய்வூதியதாரர்களுக்கான பணப்பலன்கள் இதில் இருந்து வழங்கப்படும். மேலும் விரைவில் நமது தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு பெறப்படும். இந்தியாவிலேயே குறைந்த கட்டணத்தில் பஸ்களை இயக்குவது நமது மாநிலம்தான். இதனால்தான் நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது. ஆகையால் போராட்டத்தை மறுபரிசீலனை செய்து வாபஸ் பெறவேண்டும்” என்றார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கோரிக்கையை தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன. இதையடுத்து அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாகவும், திட்டமிட்டப்படி 15-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் தலைவர் அ.சவுந்திரராஜன் கூறியதாவது:-

முதல்-அமைச்சரிடம் பேசி முதல் கட்டமாக ரூ.500 கோடி பெற்றுள்ளதாகவும், விரைவில் மேற்கொண்டு பணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வேலை நிறுத்தத்தை கைவிடவேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அரசு தரப்பில் கொடுக்கவேண்டிய ரூ.1,700 கோடி பாக்கி இருக்கிறது. இதேபோல பணியில் இருப்பவர்களுக்கு கொடுக்கவேண்டிய பஞ்சப்படி ரூ.250 கோடி பாக்கி இருக்கிறது.

ஆக மொத்தம் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி பாக்கி இருக்கிறது. இதை கொடுக்காமல் பேச்சுவார்த்தை என்பதற்கே இடம் இல்லை என்று நாங்கள் திட்டவட்டமாக கூறிவிட்டோம். இதேபோல ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.5 வீதம், ஒரு கோடி கிலோ மீட்டருக்கு 5 கோடி ரூபாய் ஒரு நாளைக்கு இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பீட்டை சரிகட்டுவதற்கு அரசு மானியம் கொடுக்கவேண்டும் எனவும், போக்குவரத்து கழகம் ஒழுங்காக இயங்குவதற்கு அனைத்து பணிகளையும் செய்யவேண்டும் எனவும் எங்கள் தரப்பில் இருந்து வலியுறுத்தினோம்.

எங்களுடைய கோரிக்கைகளுக்கு அரசு தரப்பில் இருந்து அளித்த பதில் திருப்திகரமாக இல்லை. இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. எனவே தொழிற்சங்கங்கள் அறிவித்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் என்பது திட்டமிட்டப்படி 15-ந் தேதி முதல் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.