செய்திகள்

ஊத்தங்கரை அருகே ஓடும் ரெயிலில் இருந்து தள்ளி வாலிபரை கொன்ற திருநங்கை தற்கொலை முயற்சி

ஊத்தங்கரை அருகே ஓடும் ரெயிலில் இருந்து தள்ளி வாலிபரை கொன்ற திருநங்கை அடையாளம் தெரிந்தது.

மாலை மலர்

சேலம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி ரெயில்நிலையம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள ஜி.பட்டவாடா கிராமத்தை சேர்ந்த சத்தியநாராயணா (வயது 32) என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

அவரை காப்பாற்ற முயன்ற அவரது உறவினர் காரம்வீரபாபு (20) என்ற வாலிபர் படுகாயம் அடைந்தார். ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் அங்கிருந்து சேலம் கொண்டு வரப்பட்டு, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சேலம் ஜங்சன் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து திருநங்கைகள் 3 பேரை ரெயில்வே போலீசார் பிடித்து விசாரித்தனர்.

இந்த தகவலை அறிந்த வேலூர் மாவட்ட திருநங்கைகள் சங்க தலைவர் எஸ்.கே.கங்கா தலைமையில் 260 திருநங்கைகள் திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசாரை முற்றுகையிட்டு கோ‌ஷம் எழுப்பினார்கள்.

போலீசார் பிடித்து வைத்துள்ள 3 திருநங்கைகளுக்கும், இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர்கள் கூறினார்கள். போலீசார் பிடித்து வைத்துள்ள 3 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

விசாரணைக்கு பிறகு இதுபற்றி முடிவு செய்யப்படும் என்று ரெயில்வே போலீசார் அறிவித்தனர்.

இந்த நிலையில் ஆந்திர வாலிபர் சத்திய நாராயணாவை காலால் எட்டி உதைத்து ரெயிலில் இருந்து தள்ளிவிட்ட திருநங்கை யார்? என்பது இன்று அடையாளம் தெரிந்தது. அந்த திருநங்கையின் பெயர் சுவேதா (வயது 36). வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டையை அடுத்த பாச்சல் பகுதியை சேர்ந்தவர் என்பது ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் தேடுவதை அறிந்த சுவேதா எலிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருநங்கையால் ரெயிலில் இருந்து தள்ளி கொலை செய்யப்பட்ட வாலிபர் சத்தியநாராயணா பற்றி உருக்கமான தகவல் கிடைத்து உள்ளன். அவரது சொந்த ஊரான ஜி.பட்டவாடா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலருக்கு வேலை இல்லை.

இதனால் அந்த ஊர் இளைஞர்கள் திருப்பூர் பனியன் கம்பெனியில் வந்து வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களது ஆதரவோடு வேலையில் சேர்ந்த சத்தியநாராயணா விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றார்.

மீண்டும் வேலைக்காக விஜயவாடாவில் இருந்து பொக்காரா ஸ்டீல் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருப்பூருக்கு வந்து கொண்டிருந்த போது விதிவசமாக கொலை சம்பவத்தில் சிக்கி பலியாகி விட்டார். தன்னுடன் வேலைக்காக, தனது உறவினர்கள் காரம் வீரபாபு (20), பாப்பண்ணதுரா (20), கலும்சாமிதுரா (23) ஆகிய 3 பேரையும் உடன் அழைத்து வந்தார்.

இதில் காரம் வீரபாபு தற்போது ரெயிலில் இருந்து கீழே குதித்ததால் காயம் அடைந்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று பொக்காரா ஸ்டீல் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆந்திர வாலிபர் சத்தியநாராயணா கொலை செய்யப்பட்ட பிறகு சென்னை - கோவை இடையேயும், சேலம் - பெங்களூரு இடையேயும் ரெயில்களில் திருநங்கைகளை பார்க்க முடியவில்லை என்றும், அவர்கள் தொல்லை குறைந்து உள்ளதாகவும் பயணி ஒருவர் தெரிவித்தார். #tamilnews