கோவை:
ஐதராபாத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண். கோவையில் தங்கி இருந்து ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கோவா சென்றார். கோவைக்கு வருவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கோவை நோக்கி வந்த ஜபால்பூர் அதிவேக ரெயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் ஏறினார்.
ரெயில் பெட்டியில் குடிபோதையில் இருந்த சில வாலிபர்கள் இளம்பெண்ணை கேலி, கிண்டல் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்தனர்.
மனவேதனை அடைந்த அந்த இளம்பெண் வாலிபர்களை எச்சரித்தார். பின்னர் முன்பதிவில்லா பெட்டியில் இருந்து இறங்கி குளிர்சாதன பெட்டியில் ஏறினார். ரெயில் மங்களூர் வந்ததும் ரெயிலில் இருந்து இறங்கிய அந்த இளம்பெண் டுவிட்டர் மூலமாக தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து கர்நாடக மாநிலம் கொங்கன் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் சில வாலிபர்களின் புகைப்படங்களை அந்த பெண்ணுக்கு அனுப்பினர். அதில் பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள் யாராவது உள்ளனரா? என்று பார்த்து சொல்லும் படி கூறினர். புகைப்படத்தை பார்த்த பெண் அதில் உள்ளவர்கள் யாரும் இல்லை என பதில் அளித்தார்.
இதனையடுத்து இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்களை தேடி வருகிறார்கள்.