செய்திகள்

பாலக்கோடு அருகே ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்- அடித்து கொலையா?

பாலக்கோடு அருகே ரெயில் தண்டவாளத்தில் தலைத் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தருமபுரி செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் தலைத் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 

இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில்  ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர் பஞ்சப்பள்ளி பாளையம் பகுதியை சேர்ந்த வேங்கடசாமி மகன் சிவானந்தன் (வயது22) என்பது தெரியவந்தது. இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது அங்கிருந்தவர்கள் பார்போரை கண்கலங்க வைத்தது.

இது தொடர்பாக ரெயில்வே போலீசார் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த சிவானந்தனை யாராவது அடித்து கொலை செய்து தண்டவாளத்தில் வீசி சென்றார்களா? அல்லது அவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.