எக்ஸ்பிரஸ் ரெயில் 
செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணி - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்பட 6 ரெயில்கள் தாமதம்

மதுரையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்பட 6 ரெயில்கள் தாமதமாக வந்ததால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

மாலை மலர்

நாகர்கோவில்:

மதுரையில் ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

விருதுநகர், மானாமதுரை வழியாக பல ரெயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் ரெயில்கள் தாமதமாக சென்றடையும் நிலை உள்ளது.

இதன் காரணமாக குமரி மாவட்டத்திற்கு வரும் ரெயில்களும் பல மணிநேரம் தாமதமாக நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைகிறது. இன்றும் ரெயில்கள் தாமதமாகவே நாகர்கோவில் வந்தன.

சென்னையில் இருந்து நாகர்கோவில் வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வழக்கமாக அதிகாலை 5.30 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடையும். இன்று 3 மணி நேரம் தாமதமாக காலை 8.30 மணிக்கு அந்த ரெயில் நாகர்கோவில் வந்தது.

சென்னை-நாகர்கோவில் திருக்குறள் எக்ஸ்பிரஸ் காலை 6.50 மணிக்கு வர வேண்டியது 2½ மணிநேரம் தாமதமாக 9.30 மணிக்கும், சென்னையில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் காலை 9.30 மணிக்கு பதிலாக 2½ மணி நேரம் தாமதமாக பகல் 12 மணிக்கு நாகர்கோவிலை வந்தடைந்தது.

பெங்களூருவில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவில் வரும் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 8.20 மணிக்கு பதிலாக 10 மணிக்கு தாமதமாக வந்தது. கோவை-நாகர்கோவில் ரெயில் காலை 4.55 மணிக்கு பதிலாக 2 மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு நாகர்கோவில் வந்தடைந்தது. ரெயில்கள் தாமதமாக வந்ததால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.