புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர்கள் சாமன், கிஷண், சன்னி. இவர்கள் மூவரும் உறவினர்கள்.
இவர்கள் மூவரும் தங்கள் உறவினர் ஒருவர் திருமணத்திற்காக டெல்லிக்கு சென்று இருந்தனர். அவர்களுடன் தினேஷ் என்பவரும் டெல்லி சென்று இருந்தார்.
டெல்லியில் பானிபட் பூங்கா பகுதியில் அவர்கள் நேற்று மாலை செல்பி எடுத்தபடி இருந்தனர். அந்த பூங்கா பகுதி அருகில் உள்ள ரெயில் தண்டவாளத்துக்குள் சென்று செல்போனில் செல்பி எடுத்தனர்.
அந்த சமயத்தில் அந்த தண்டவாளத்தில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வேகமாக வந்து கொண்டு இருந்தது. தூரத்தில் வந்துக் கொண்டிருந்த ரெயிலையும் சேர்த்து செல்பி எடுக்க வேண்டும் என்று அவர்கள் 4 பேருக்கும் ஆசை ஏற்பட்டது.
தண்டவாளத்தின் மத்தியில் நின்றபடி அவர்கள் ரெயில் வரும் திசையை நோக்கி செல்பி எடுத்தனர். மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில் செல்பி எடுத்ததால் ரெயில் அருகில் வந்ததை அவர்கள் கவனிக்கவில்லை.
கண் இமைக்கும் நேரத்திற்குள் ரெயில் அவர்கள் மீது மோதியது. அப்போது தினேஷ் மட்டும் தண்டவாளத்தில் இருந்து வேகமாக குதித்து தப்பினார்.
சாமன், சன்னி, கிஷண் மூவரும் ரெயிலில் சிக்கினார்கள். சம்பவ இடத்திலேயே அவர்களது உடல் துண்டு துண்டாக சிதறியது. சுமார் 30 அடி தூரத்துக்கு அவர்களது உடல் சிதறி கிடந்தது.
இதைப் பார்த்ததும் தினேஷ் அலறியபடி மயங்கி விழுந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் உடல் துண்டு துண்டாக சிதறி கிடந்ததைதான் அவர்களால் பார்க்க முடிந்தது.
செல்பி மோகத்தில் அவர்கள் 3 பேரும் பலியாகி இருப்பது தெரிய வந்ததும் அனைவரும் பரிதாபத்துடன் கலைந்து சென்றனர். ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். #selfie #trainaccident