செய்திகள்

பாதுகாப்பு வரி விதிக்கப்படுவதால் ரெயில் கட்டணம் உயர்கிறது

பாதுகாப்பு வரி விதிக்கப்படும் பட்சத்தில் ரெயில் கட்டணமும் உயர்கிறது. கட்டண உயர்வு எந்த அளவுக்கு இருக்கும் என்பது இனிமேல் தான் தெரியவரும்.

புதுடெல்லி:

நாடெங்கும் பல்வேறு பகுதிகளில் ரெயில் விபத்துகள் அதிகரித்ததைத் தொடர்ந்து ரெயில் பாதைகளை மேம்படுத்தவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை நவீன முறையில் தரம் உயர்த்தவும் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி செலவிடப்படும்  என்று மத்திய அரசு அறிவித்தது.

இதில் 25 சதவீதத்தை மத்திய நிதி அமைச்சகம் ரெயில்வேக்கு வழங்க உள்ளது. மீதமுள்ள 75 சதவீத நிதியை ரெயில்வே தாமாகவே ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து நிதி ஆதாரத்தை உயர்த்த புதிய வரி விதிப்புகளுக்கு ரெயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ரெயில் கட்டணங்களில் பாதுகாப்பு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு வரி விதிக்கப்படும் பட்சத்தில் ரெயில் கட்டணமும் உயர்ந்து விடும். பாதுகாப்பு வரி எத்தனை சதவீதம் விதிக்கப்படும் என்பதைப் பொறுத்தே ரெயில் பயணிகள் கட்டண உயர்வு எந்த அளவுக்கு இருக்கும் என்பது தெரியவரும்.

கடந்த 6 மாதங்களில் நாட்டின் பல பகுதிகளிலும் ரெயில்கள் தடம் புரள்வது அதிகரித்துள்ளது. எனவே ரெயில்வே தண்டவாளங்களை  சீரமைக்க முன்னுரிமை கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

பாதுகாப்பு வரி மூலம் திரட்டப்படும் பணம் ரெயில் பாதைகளை மேம்படுத்த செலவிடப்படும். இதற்கிடையே ரெயில்வே இலாகாவில் தேவையற்ற செலவுகளை குறைக்கவும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT