புதுடெல்லி:
இந்தியாவில் அதிகபடியான மக்கள் தொலைதூர பயணங்களுக்கு ரெயில் சேவையையே நம்பியுள்ளனர். கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிகழ்ந்த ரெயில் விபத்துகளால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ஜூலை மாதம் உத்தரப்பிரதேசத்தில் கலிங்க உத்கல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். 156 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, மேலும் பல இடங்களில் விபத்துகள் நடந்தன.
கடந்த 2016-2017ம் ஆண்டில் முதல் எட்டு மாதத்தில் 78 ரெயில் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இந்தாண்டு ஜனவரியில் தொடங்கி முதல் எட்டு மாதங்களில் 37 விபத்துக்கள் நடந்துள்ளன ரெயில்வே துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 2016-17 நிதியாண்டைவிட இந்த நிதியாண்டில் இதுவரை ரெயில் விபத்துகள் 40 முதல் 45 சதவிகிதம் வரை குறைந்துள்ளதாக இந்திய ரெயில்வேத்துறை தலைவர் அஷ்வானி லொகானி தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து ரெயில் விபத்துகள் குறையும் என கூறிய அவர், ரெயில்களில் வழங்கப்படும் உணவின் தரம், ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களின் தூய்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் கூறினார்.
வருகிற ஜூன் மாதத்திற்குள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 500 ரெயில் நிலையங்களுக்கு இலவச வை-பை சேவை வழங்கப்படும். தொலைதூர ரெயில் சேவைகளை அதிகரிப்பது மற்றும் அவற்றின் நிறுத்தங்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அதுகுறித்து திட்டங்கள் வரையறுக்கப்பட்டு வருகிறது. அவை முடிவு செய்யப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என கூறினார். #TrainAccidents #Railwaychief #tamilnews