செய்திகள்

அவினாசி அருகே சுற்றுலா வேன்- மினி லாரி மோதி ஒருவர் பலி

அவினாசி அருகே சுற்றுலா வேன்- மினி லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். 33 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

அவினாசி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து ஒரு சுற்றுலா வேன் பரளிக்காடுசென்றுவிட்டு திரும்பவும் மன்னார்குடிநோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று இரவு 9 மணி அளவில் அவினாசியை அடுத்து வெள்ளியம்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தது. வேனில் 13 பேர் இருந்தனர்.

இந்த நிலையில் நிலகோட்டையில் இருந்து மல்லிகைப்பூ லோடு ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி நீலகிரி மாவட்டம் ஊட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. வேனை நிலக்கோட்டையை சேர்ந்த மதன்(28) என்பவர் ஒட்டி வந்தார்.

அவருக்கு அருகில் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அழகர் பெருமாள்(22) என்பவர் உட்கார்ந்திருந்தார். அப்போது வெள்ளியம்பாளையம் அரசு பணியாளர் நகர் அருகே ஒரு வளைவில் வந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி பக்கவாட்டில் கவிழ்ந்து எதிரே வந்து கொண்டிருந்த சுற்றுலா வேன் மீது மோதியது.

இதில் அழகர் பெருமாள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார். அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவரை மீட்க முயன்றனர். அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டதால் அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது.

அவினாசி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விரைந்து வந்து மினி லாரியின் கதவை உடைத்து அழகர் பெருமாளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் அழகர் பெருமாள் இறந்துவிட்டதாக கூறினார். இந்த விபத்தில் மினி லாரி டிரைவர் மதன் மற்றும் சுற்றுலா வேனில் வந்த ஓட்டுனர் சுசில் குமார்48 மற்றும் சோமசுந்தரம் 33 ஆகியேர் காயம் அடைந்தனர்.

அவர்கள் அவினாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.