ஸ்ரீநகரில் உள்ள ஒரு பகுதி 
செய்திகள்

மத்திய சுற்றுலாத்துறை மந்திரி காஷ்மீர் பயணம்

ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா இடங்களை மேம்படுத்துவது தொடர்பாக மத்திய சுற்றுலாத்துறை மந்திரி பிரஹலாத் படேல் அடுத்தமாதம் அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மாலை மலர்

புது டெல்லி:

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேங்களாக பிரித்தது. 

இயற்கை எழில் மிகுந்த காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்பட்டு வந்தது.   

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டதையடுத்து அங்கு சுற்றுலாத்துறை வளர்ச்சியை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய அடுத்த மாதம் முதல் வாரத்தில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி பிரஹலாத் படேல் அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த பயணத்தின் போது லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டுபிடித்து அப்பகுதிகளை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் விதமாக உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ஆய்வு நடத்தப்படும். 

காஷ்மீரில் உள்ள சுற்றுலா வழிகாட்டிகளுக்கு தேவையான திறமை வளர்ப்பு பயிற்சிகள் நடத்தப்படும். இதன்மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் தொழில் வளர்ச்சியும் முன்னேற்றம் அடையும் என மத்திய சுற்றுலாத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

மத்திய சுற்றுலாத்துறையை சார்ந்த இரண்டு அதிகாரிகள் ஏற்கனவே காஷ்மீர் பகுதியில் முகாமிட்டு சுற்றுலா தொடர்பாக ஆய்வுகள் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.