செய்திகள்

புகையிலை கறைபடிந்த சுவர்களை வெறும் கைகளால் சுத்தம் செய்த சுற்றுலாத்துறை மந்திரி

டெல்லியில் தூய்மைப் பணி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்ற மத்திய மந்திரி, புகையிலை கறைபடிந்த சுவர்களை வெறும் கைகளால் சுத்தம் செய்தது வியப்பை ஏற்படுத்தியது.

மாலை மலர்

தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்த பிரதமர் மோடி, தான் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில் இதுபற்றி மக்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார். இந்த திட்டத்தினை மக்களிடையே கொண்டு செல்வதற்காக முக்கிய பிரபலங்கள் இத்திட்டத்தின் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த பகுதி அரசியல் பிரமுகர்களும் இத்திட்டத்திற்கான விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மக்கள் அனைவரும் தூய்மைப்பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக சமீபத்தில் தூய்மையே சேவை என்ற பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும் என்பதற்காக அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் சாலைகளில் உள்ள குப்பைகளை கூட்டி, சுத்தம் செய்து வருகின்றனர்.

அவ்வகையில், டெல்லியில் மத்திய சுற்றுலாத்துறை இணை மந்திரி அல்போன்ஸ் கண்ணந்தனம், வெறும் கைகளால் புகையிலை கறைபடிந்த சுவர்களை சுத்தம் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

டெல்லி ஜன்பத் மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அல்போன்ஸ், அங்கிருந்த துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது சுவர்களில் உள்ள புகையிலை கறையை அகற்றுவதற்காக தண்ணீரை ஊற்றினார். பின்னர் சோப் போட்டு தேய்ப்பதற்கு ஸ்கிரப்பர் கேட்டுள்ளார். அவருடன் வந்தவர்களில் ஒருவர் நீண்ட பிளாஸ்டிக் கைப்பிடி கொண்ட ஸ்கிரப்பரை கொடுத்துள்ளார். அதனை வேண்டாம் என்று சொன்ன மந்திரி அல்போன்ஸ், கையில் வைத்து தேய்க்கும் ஸ்கிரப்பர் கொண்டு வரும்படி கூறினார்.

அந்த ஸ்கிரப்பர் வருவதற்கு சற்று தாமதம் ஆனதால், வெறும் கைகளால் சோப் போட்டு சுவரில் படிந்திருந்த கறைகள் மீது தேய்த்து சுத்தம் செய்தார். பின்னர் கையடக்க ஸ்கிரப்பர் கொண்டு வந்ததும் அதனை வைத்து சுவர்களில் தேய்த்தார். துப்புரவு ஊழியர்கள் அனைவரும் கைகளில் உறைகளுடன் பணியில் ஈடுபட்டபோது, மத்திய மந்திரி ஒருவர் வெறும் கைகளால் சுவர்களை சுத்தம் செய்தது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன், மக்களிடையே தூய்மையின் அவசியத்தை உணர்த்துவதாகவும் இருந்தது.