செய்திகள்

தாக்கப்பட்ட சுவிட்சர்லாந்து தம்பதியருடன் சுற்றுலா துறை மந்திரி மருத்துவமனையில் சந்திப்பு

ஆக்ராவில் தாக்கப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுவிட்சர்லாந்து தம்பதியினரை சுற்றுலா துறை மந்திரி அல்போன்ஸ் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

மாலை மலர்

புதுடெல்லி:

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா அருகில் உள்ள பழமையான நகரமான பதேபூர் சிக்ரி என்ற பகுதியில் கடந்த ஞாயிறு அன்று சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலா தம்பதியினர் மீது உள்ளூர் கும்பல் ஒன்று கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த தம்பதியினர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உத்தரப்பிரதேச மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளார்.

சமீபத்தில் ஆக்ராவுக்கு சென்ற முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறுகையில், சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து தம்பதி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 5 பேரை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுவிட்சர்லாந்து தம்பதியரை சுற்றுலா துறை மந்திரி அல்போன்ஸ் நேரில் சென்று சந்தித்தார். அப்போது அவர்களிடம் பேசிய மந்திரி, விரைவில் குணமடைய வேண்டும் என ஆறுதல் கூறினார்.