சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 5-ந்தேதி டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிவப்பு நிற சூட்கேசில் துண்டு துண்டாக வெட்டி எடுக்கப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதுபற்றி அம்மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். சென்னையில் இருந்து பெண்ணை கொன்று கொலை செய்து சூட்கேசில் அனுப்பி வைத்த தால் சென்னைக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்கள்.
சென்ட்ரல் ரெயில் நிலைய போலீசாருடன் இணைந்து விசாரித்த ஆக்ரா போலீசார் வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட பெண் கூடுவாஞ்சேரியில் வைத்து துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
அவரது பெயர் ஹயாத் நிஷா என்பதும், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவரை ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்த அசாமை சேர்ந்த ராகுல், ஒடிசாவை சேர்ந்த பகவதி மாஜி ஆகிய இருவரும் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ராகுல்-பகவதி மாஜி தம்பதியை பிடிப்பதற்கு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக அசாம் மற்றும் ஒடிசாவுக்கு 2 தனிப்படைகள் விரைந்து சென்று உள்ளன. சென்னையில் 2 தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். வீடியோ காட்சி வெளியில் வந்ததும் தம்பதி உஷாராகி தங்களது செல்போன் எண்ணை சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவாகி விட்டனர். இதனால் அவர்கள் இருக்கும் இடத்தை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
இதை தொடர்ந்து தம்பதியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரது செல்போன் எண்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். அவர்கள் மூலமாக இருவரையும் பிடிக்க வலைவிரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கொலையுண்ட பெண்ணின் தலை இன்னும் சிக்காமல் உள்ளது. கொலையாளிகள் இருவரும் ஹயாத் நிஷாவை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றதுடன் சதை பாகங்கள் பெரிய அண்டாவில் போட்டு சமைத்ததும் போலீசாருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்படி பெண்ணின் உடல் பாகங்கள் ஈவு இரக்கமின்றி வெட்டி எடுத்த தம்பதி துண்டிக்கப்பட்ட தலையை எங்கு வீசினார்கள் என்பதும் தெரியவில்லை.
உடலை துண்டு துண்டாக வெட்டி எடுத்துவிட்டு தலையை துண்டித்த தம்பதி அதனை அடையாளம் தெரியாத அளவுக்கு சுக்கு நூறாக சிதைத்து தனித்தனியாக வீசி இருக்கலாமா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது. கூடுவாஞ்சேரியில் இருந்து சூட்கேசில் பெண்ணின் உடல் பாகங்கள் அடைத்து எடுத்து வந்த போது தலையையும் தனியாக ஒரு பையில் வைத்து எடுத்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அப்போது ரெயிலில் இருந்தபடியே தலை இருந்த பையை மட்டும் தண்டவாளம் மூலமாக வீசி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த 5-ந்தேதி ஆக்ராவில் பெண்ணின் உடல் பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் மறுநாளே அங்குள்ள போலீசார் சென்னை வந்து கொலை செய்யப்பட்டவரை அடையாளம் கண்டுவிட்டனர். அன்று முதல் பெண்ணின் தலையை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதன் மூலம் கடந்த 3 வாரங்களாக ஹயாத் நிஷாவின் தலையை தேடி அலையும் போலீசார் அதனை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.
தாம்பரம் போலீஸ் கமிஷனர் பிரேமானந்த் சின்கா உத்தரவின் பேரில் உயர் போலீஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. போலீசுக்கு பெரும் சவாலாக இருக்கும் இந்த வழக்கில் எப்படி துப்பு துலக்கி கொலையாளிகளை கண்டுபிடித்து விடுவோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அசாம் மற்றும் ஒடிசாவில் கொலையாளிகளின் உறவினர்களை பிடித்து விசாரித்து வரும் போலீசார் அவர்கள் மூலமாக தம்பதி பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் விரைவில் கொலையாளிகள் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.