சேலம் மாவட்டம் வரலாற்று ரீதியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்படுகிறது. அதுவும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாவட்டம் என்பதால் இப்போதும் அங்கு அதிமுகவிற்குதான் அதிக செல்வாக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021 சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாடு முழுவதும் திமுக வெற்றி பெற்றபோதும், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. குறிப்பாக, சேலம் தெற்கு தொகுதியில் 2001 முதல் 2021 வரை தொடர்ந்து ஐந்து முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதியில் அதிமுக பின்னடைவைச் சந்தித்தது. திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதி சுமார் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரைத் தோற்கடித்தார்.
இதனால் எதிர்வரும் 2026 தேர்தலில் தனது கோட்டையைத் தக்கவைத்துக் கொள்ள அதிமுக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. ஆளுங்கட்சியான திமுகவும் தனது செல்வாக்கை அதிகரிக்க பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதால், சேலத்தில் கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் மாலைமலர் தரப்பில் தேர்தல் குறித்து மக்களிடையே கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சேலம் தொகுதியில் கேட்கப்பட்ட கருத்துக்கணிப்பில் அங்கு திமுகவிற்கு ஆதரவு பெருகியுள்ளது தெரியவந்துள்ளது. இரண்டாவது இடத்தில் விஜய்யின் தவெக உள்ளது.