அமெரிக்காவின் பெரிய நகரான லாஸ் ஏஞ்சல்சில் அடுத்த மாதம் 2-ம் தேதி மேயர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் நித்யா ராமன், தற்போதைய மேயர் கரேன் பாசுக்கு சவாலாக உருவெடுத்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 60 சதவீதம் இருக்கிறது என கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.
கேரளாவை சேர்ந்த தமிழ் குடும்பத்தில் 1981-ம் ஆண்டு பிறந்தவர்தான் நித்யா ராமன். இவருக்கு 6 வயது இருக்கும்போது பெற்றோர் அமெரிக்கா குடிபெயர்ந்தனர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் கோட்பாடும், மசாசூசட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நகரத் திட்டமிடலும் பயின்றார். கடந்த 2013-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியேறினார் இவர்.
கடந்த 2020-ம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன் போன்ற ஜாம்பவான்களின் ஆதரவு பெற்ற ஒருவரை தோற்கடித்த நித்யா ராமன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகர சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தெற்காசியப் பெண் என்ற சாதனையைப் படைத்தார்.
அடுத்த மாதம் நடைபெற உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் தேர்தலில் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக பிப்ரவரி 7-ம் தேதி மனுதாக்கல் செய்தார்.
நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற மம்தானியைப் போல, நித்யா ராமனும் லாஸ் ஏஞ்சல்ஸ் அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.