ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 6 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை சார்ந்த ஆறு மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிகழ்வின் மீது தங்களது கவனத்தை ஈர்க்க விழைகிறேன்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை சார்ந்த அலெக்ஸ், அந்தோணி ராஜன், சந்தான அலோசியஸ், அருள் தே பிரிட்டோ, ஆல்பர்ட் மற்றும் சகாய செல்வசானு ஆகிய ஆறு மீனவர்கள் நேற்று முன்தினம் நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அவர்களை சர்வதேச எல்லையை கடந்ததாக தெரிவித்து இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையால் ஏற்கனவே 54 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ளனர். மேலும் 264 படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன்.
எனவே இப்பிரச்சனை குறித்து இலங்கை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக மீட்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு முதலமைச்சர் விஜய் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.