டிசிஎஸ் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையின்படி, அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வரும் கிருத்திவாசனுக்கு, ரூபாய் 28 கோடி ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் கே.கிருத்திவாசன், 2025-2026 நிதியாண்டில் மொத்தமாக ரூ.28 கோடி ஊதியமாக பெற்றுள்ளார்.
இது முந்தைய ஆண்டை விட 6.3 சதவீதம் அதிகம் என அந்நிறுவனத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.
கிருத்திவாசனின் நிதியாண்டுக்கான மொத்த ஊதியத்தில், ரூ.1.67 கோடி அடிப்படை சம்பளமாகவும், ரூ.1.43 கோடி இதர சலுகையாகவும், ரூ.25 கோடி செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகையாகவும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிதியாண்டில் டிசிஎஸ் ஊழியர்களின் சராசரி ஊதியம் 4.5 சதவீதத்தில் இருந்து 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.