முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் ரூ. 58,214 கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின்றன. இதன் மூலம் மாநிலம் முழுவதும் 65,786 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதலமைச்சர் விஜய் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் மொத்தம் 75 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 1,000 வேலைவாய்ப்புகள் என்ற இலக்குடன், 200 நாட்களில் 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 50 சதவீத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சென்னைக்கு வெளியே புதிய ஆலைகளை நிறுவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ. 15,250 கோடி முதலீட்டில் 12 பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
பிரேசிலைச் சேர்ந்த WEG நிறுவனம் தருமபுரி மாவட்டத்தில் ரூ. 2,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் RAANA SEMICONDUCTORS நிறுவனம் ரூ. 150 கோடி முதலீடு செய்கிறது. மேலும், Hwashin Automotive India Private Limited நிறுவனத்துடன் ரூ. 850 கோடிக்கும், தென்கொரியாவின் போஸ்கோ நிறுவனத்துடன் ரூ. 250 கோடிக்கும், ராயல் என்பீல்டு நிறுவனத்துடன் ரூ.1,000 கோடிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. டிவிஎஸ் மோட்டார் கம்பெனி ரூ. 2,000 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது.
ஜவுளித் துறையில் ரூ.3,928 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. PMC Hydraulics நிறுவனத்துடன் ரூ. 300 கோடிக்கும், JK Fenner நிறுவனத்துடன் ரூ.900 கோடிக்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதனுடன், CSE டெவலப்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் ரூ. 8,140 கோடி, ஜே.எம். போர்ட்ஸ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ரூ. 5,200 கோடி, சன்மார் குரூப் ரூ.1,950 கோடி, டைட்டன் கம்பெனி லிமிடெட் ரூ.1,500 கோடி, இமாமி அக்ரோடெக் ரூ. 1,380 கோடி, அப்பலோ டயர்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ.1,100 கோடி மற்றும் ஆம்பா குரூப் ரூ. 1,072 கோடி ஆகிய முதலீட்டு ஒப்பந்தங்களும் இடம்பெற்றுள்ளன.