தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை, நடிகை சமந்தா சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த சந்திப்பு தொடர்பாக,
“இன்று நான் சென்னைக்கு சென்றபோது எனக்குள் ஒரு எல்லையற்ற மகிழ்ச்சியை உணர்ந்தேன். நான் நம்முடைய முதலமைச்சரை சந்தித்தேன். விஜய் சார் எப்போதுமே திரையில் மட்டும் நாயகனாக இருக்க வேண்டியவர் இல்லை என்று நான் எப்போதும் நினைப்பதுண்டு.
அவருடைய ஆற்றல், அவருடைய ஆளுமை மற்றும் மக்கள் அவருக்குக் கொடுக்கும் வரவேற்பு ஆகிய அனைத்தும், அவர் இதைவிடப் பெரிய ஏதோவொன்றிற்காக உருவாக்கப்பட்டவர் என்றே எனக்கு எப்போதும் தோன்றும்.
என்னை எல்லாவற்றையும் விட அதிகமாக ஊக்கப்படுத்துவது எதுவென்றால், முற்றிலும் புதிய ஒரு களத்தில் காலடி எடுத்து வைப்பதற்குத் தேவைப்படும் அந்தத் துணிச்சல் தான். நீங்கள் ஏற்கனவே சாதித்து, முத்திரை பதித்த ஒரு துறையை விட்டுவிட்டு, சவால்களும், ஆபத்துகளும் மிக அதிகமாக இருக்கும் ஒரு புதிய ஒன்றை கையில் எடுப்பது சாதாரண விஷயமல்ல.
அது எளிதானது என்பதற்காக அல்ல, மாறாக ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையாலேயே அத்தகைய முடிவை எடுக்கிறோம்.
நமது வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில், நம்மைத் தாண்டிச் சிந்தித்து, சமூகத்திற்கு நாம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்று யோசிப்பதன் மூலம், இன்னும் பெரிய காரியங்களைச் செய்வதற்கான அழைப்பை நாம் அனைவரும் பெறுகிறோம் என்று நான் நினைக்கிறேன்.
ஆனால், மிகச் சிலரே அந்த அழைப்பிற்குச் செவிசாய்த்து களத்தில் இறங்குகிறார்கள். விஜய் சார், ஏற்கனவே அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மனிதர்களைக் கூட தனது செயல்களால் ஆச்சரியப்படுத்துவார் என்ற ஒரு உள்ளுணர்வு எனக்கு இருக்கிறது. அவர் வகிக்கும் பதவியால் அல்ல, அவர் எந்தவொரு விஷயத்தையும் அணுகும் உன்னதமான நோக்கத்தின் காரணமாக அவர் அதைச் செய்வார்.
அவருக்கு இந்தப்பாதையில் பயணிக்கத் தேவையான வலிமையும், ஞானமும், தொடர்ந்து நிலைத்து நிற்பதற்கான துணிச்சலும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் இது ஒரு நினைவூட்டலாக இருக்கட்டும். வாழ்க்கை என்பது நீங்கள் முதலில் கண்ட கனவை விடவும் மிக பிரம்மாண்டமானதாக மாறக்கூடும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றது முதல் திரையுலகைச் சேர்ந்த பலரும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை சமந்தா சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.