தலைப்புச்செய்திகள்

ரஷ்ய அதிபர் புதினுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ச்திப்பு

பொருளாதார ஒத்துழைப்பு மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது என்று நான் கருதுகிறேன்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். வர்த்தகம், எரிசக்தி, உரங்கள் மற்றும் அணுசக்தி ஒத்துழைப்பு போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்தி, இரு தரப்பினரும் பொருளாதார உறவுகள் குறித்து விவாதித்தனர்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் தலைவர்கள் உச்சி மாநாட்டிற்காக புதின் டெல்லிக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாஸ்கோ சென்றடைந்தார்.

நல்ல அறிக்கை:

இந்தியாவும் ரஷ்யாவும் தங்களது பொருளாதார ஈடுபாட்டை ஆழப்படுத்தவும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் முற்படுவதால், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இரு தரப்பினரும் இன்று காலை அரசுகளுக்கிடையேயான ஆணையத்தின் கூட்டத்தை நடத்தியதாகவும், தங்களது பொருளாதார ஒத்துழைப்பு குறித்து ஒரு 'நல்ல அறிக்கை' கிடைத்ததாகவும் ஜெய்சங்கர் கூறினார்.

"நமது பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், எரிசக்தி, உரங்கள், அணுசக்தி மற்றும் பிற பரிமாணங்கள் குறித்து நான் விரிவாகப் பேச விரும்புகிறேன். ஒட்டுமொத்தமாக, நமது பொருளாதார ஒத்துழைப்பு மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது என்று நான் கருதுகிறேன்," என வெளியுறவு அமைச்சர் கூறினார்.

விநியோகம் அதிகரிப்பு:

இந்தியாவுக்கான உர விநியோகத்தை ரஷ்யா அதிகரித்து வருவதாகவும், அதை தொடர தயாராக இருப்பதாகவும் புதின் கூறியதாக அரசுக்கு சொந்தமான டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"இந்திய விவசாயிகள் மற்றும் விவசாய துறையின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்வதற்கும், இந்த விநியோகங்களை அதிகரிப்பதற்கும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம், மேலும் அவ்வாறே தொடர்ந்து செய்ய தயாராக இருக்கிறோம்," என்று புதின் கூறியதாக டாஸ் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.

"இந்த ஆண்டு நமது வர்த்தகம் அதிகரித்திருப்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஆண்டு அது சற்று சரிந்திருந்தது, ஆனால் இந்த ஆண்டு வளர்ந்து வருகிறது," என்று புதின் கூறியதாக அந்த செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.

இந்திய பிரதமர் ஆவல்:

ரஷ்யாவும் இந்தியாவும் பல தசாப்தங்களாகக் கட்டியெழுப்பிய உறவுகளின் அளவை ஜெய்சங்கரின் பயணம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும், இரு அரசாங்கங்கள், நாடாளுமன்றங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பு நடைபெற்று வருகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளையும் ஒரு தனிப்பட்ட செய்தியையும் புதினிடம் தெரிவித்த ஜெய்சங்கர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் அவரை சந்திப்பதற்கும், பின்னர் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக இந்தியாவிற்கு அவரை வரவேற்பதற்கும் இந்திய பிரதமர் ஆவலுடன் காத்திருப்பதாக கூறினார்.

"பிரதமர் மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் உங்களைச் சந்திப்பதையும், அதைத் தொடர்ந்து பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக உங்களை இந்தியாவிற்கு வரவேற்பதையும், உரிய காலத்தில் உங்கள் இருவரின் பரஸ்பர வசதிக்கேற்ப வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்துவதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்," என்று ஜெய்சங்கர் கூறினார்.

2026-ஆம் ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாடு ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 வரை கிர்கிஸ்தானில் நடைபெறுகிறது, அதேசமயம் பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாடு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறும். "எனவே, மாண்புமிகு அவர்களே, ஒத்துழைப்பின் மிகவும் வலுவான ஒரு சித்திரம் நம்மிடம் இருப்பதாக நான் கருதுகிறேன்," என்று இந்திய வெளியுறவு அமைச்சர் மேலும் கூறினார்.