தலைப்புச்செய்திகள்

'ராமாயணா' திரையிடலின்போது திரையரங்கிற்குள் சைவ உணவு மட்டுமே: வங்காள மல்டிபிளக்ஸ் நிறுவனம் அறிவிப்பு

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் நவம்பர் 5-ஆம் தேதி 'ராமாயணா: பார்ட் 1' திரைப்படம் வெளியானது.

'ராமாயணா: பார்ட் 1' திரைப்படம் திரையிடப்படும் நேரங்களில், திரையரங்கிற்குள் பார்வையாளர்களுக்குச் சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என்று மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த எஸ்.வி.எஃப் சினிமாஸ் மல்டிபிளக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பார்வையாளர்கள் தங்கள் பக்தி உணர்வோடு படத்தை முழுமையாக ரசிக்க வசதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் நவம்பர் 5-ஆம் தேதி 'ராமாயணா: பார்ட் 1' திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தின் காட்சிகளின்போது திரையரங்கிற்குள் சைவ உணவு மட்டுமே பரிமாறப்படும் என அறிவித்துள்ள எஸ்.வி.எஃப் சினிமாஸ் செய்தித் தொடர்பாளர், "சில திரைப்படங்கள் வெறும் சினிமாவையும் தாண்டியவை. ராமாயணா திரையிடலின்போது அனுமன் சாலிசா ஒலிக்கும்போது, திரையரங்கே ஒரு கோயில் போல மாறிவிடுகிறது; நாங்களும் அதையே உணர்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆன்மீக மற்றும் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களின்போது பார்வையாளர்கள் தங்கள் பக்தி உணர்வை வெளிப்படுத்தி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அந்நிறுவனம், முன்னதாக 2024-ஆம் ஆண்டு வெளியான 'மகாவதார் நரசிம்மா' திரையிடலின்போது பல பார்வையாளர்கள் மரியாதையின் அடையாளமாகத் தங்கள் காலணிகளைத் திரையரங்கிற்கு வெளியே விட்டுச் சென்றதை நினைவு கூர்ந்துள்ளது. அதேபோல, 'ஹனுமான் அம்ஷ்' திரையிடப்பட்டபோதும் திரையரங்கிற்குள் சைவ உணவு மட்டுமே வழங்க வேண்டும் எனப் பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் விதமாகவும், பார்வையாளர்களின் உணர்வுகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான உணவு வசதி

மேற்கு வங்காளம் முழுவதும் 30 இடங்களில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை இயக்கி வரும் எஸ்.வி.எஃப் சினிமாஸ், இந்தக் கட்டுப்பாடு 'ராமாயணா: பார்ட் 1' காட்சிகளின்போது திரையரங்கிற்குள் மட்டுமே பொருந்தும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. அசைவ உணவுகள் உள்ளிட்ட வழக்கமான உணவு மற்றும் பானங்கள் திரையரங்கிற்கு வெளியே உள்ள கவுன்டர்களில் தொடர்ந்து கிடைக்கும் என்றும், மற்ற திரைப்படங்களின் திரையிடலின்போது வழக்கமான உணவு நடைமுறைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

நிரந்தரக் கொள்கை மாற்றம் அல்ல

இது நிறுவனத்தின் உணவுக் கொள்கையில் செய்யப்பட்ட நிரந்தர மாற்றம் அல்ல என்றும், 'ராமாயணா' படத்திற்கு மட்டுமே பிரத்யேகமாக செய்யப்பட்ட ஏற்பாடு என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அனைத்துப் பின்னணியைச் சேர்ந்த பார்வையாளர்களும் எப்போதும் வரவேற்கப்படுவதாகவும், அனைவருக்கும் ஏற்ற இடமாகத் திரையரங்குகள் தொடர்ந்து செயல்படும் என்றும் எஸ்.வி.எஃப் சினிமாஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. புராண மற்றும் கலாச்சாரப் பின்னணி கொண்ட படங்களின்போது பொழுதுபோக்கையும் தாண்டி பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப திரையரங்குகள் தங்களை மாற்றியமைத்து வரும் போக்கையே இந்த நடவடிக்கை காட்டுவதாகக் கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT