தலைப்புச்செய்திகள்

மாநிலங்களவை இடைத்தேர்தல் ஜூன் 18-ந்தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தினம் ஜூன் 8-ந்தேதி என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கட்சி சார்பாக மயிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சி.வி சண்முகம். ஆனால் சி.வி.சண்முகம் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒருவர் ஒரு பதவியை மட்டுமே வகிக்க முடியும் என்ற விதிகளின்படி மாநிலங்களவை உறுப்பினர் பதவியை சி.வி சண்முகம் ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை மாநிலங்களவை தலைவரும் இந்திய குடியரசு துணைத்தலைவருமான சி.பி ராதாகிருஷ்ணனிடம் நேரில் வழங்கினார்.

இந்நிலையில் ராஜினாமா கடிதம் மாநிலங்களவை செயலகம் மூலம் பரிசீலிக்கப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டதோடு இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானதை பரிந்துரைத்தனர்.

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் மாநிலங்களவை பதவிக்கான இடைத்தேர்தலை இன்று அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு மாநிலங்களவை இடத்திற்கான தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் அவர்களது வேட்பு மனுக்களை ஜூன் 1-ந்தேதி முதல் தாக்கல் செய்யலாம் எனவும், வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தினம் ஜூன் 8-ந்தேதி என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 9-ந்தேதி நடைபெறும் என்றும் வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 11ம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து ஜூன் 18-ந்தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.