திரிபுரா மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குநர் அனுராக் தங்கர், காவல்துறை தலைமையகத்தில் உள்ள தனது அலுவலக குளியலறையில் இருந்து இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
உடனே போலீசார் அவரை அகர்தலா கோவிந்த் பல்லப் பந்த் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அனுராக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர். மேலும் போலீசாரும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்தச் செய்தியைத் தொடர்ந்து, முதலமைச்சரும் மற்ற மூத்த அரசு அதிகாரிகளும் டிஜிபி அலுவலகத்திற்கு விரைந்தனர். மாநிலத்தின் உயர்மட்ட காவல் அதிகாரியின் மரணம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1994-ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்த இவர், திரிபுரா காவல்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தார். கடந்தாண்டு மே மாதம் காவல்துறையின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் மாநிலத்தின் புலனாய்வுத் துறை தலைமை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
மேலும் சிபிஐ, பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப் மற்றும் கொசோவோவில் உள்ள ஐ.நா. அமைதி காக்கும் படையிலும் பணியாற்றியுள்ளார். சிபிஐ-யில் பணியாற்றிய காலத்தில், மோசடிக் குற்றவாளியான நீரவ் மோடி தொடர்பான விசாரணையை வழிநடத்தினார்.