இன்று கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாள், கல்விக்கண் திறந்த பெருந்தலைவர். 1954-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டு வரை 9 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக முதலமைச்சர் பதவியை அலங்கரித்தவர்.
இந்த காலகட்டத்தில் காமராஜரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர்களில் ஒருவர் வி.எம்.கருப்புடையார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த இவருக்கு. தற்போது 97 வயது ஆகிறது.
காமராஜரிடம் 5 ஆண்டுகள் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தபோது நடந்தவற்றை. அவரது பிறந்தநாளில் நினைவுகூரும் கருப்புடையார். காமராஜரின் கனவு நிறைவேறி இருப்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறார்.
காமராஜரின் கனவு என்ன? என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும், அவரோடு பயணித்த தனக்கு அந்த கனவை நிறைவேற்ற காமராஜர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அத்தனையும் தெரியும் என்றும், தற்போது அது நிறை வேறி இருப்பதன் மூலம் அவரது கனவு நனவாகி இருப்பதை தனது நிகழ்காலத் தில் பார்க்கும் வாய்ப்பை நினைத்து மகிழ்ச்சி அடைவதாகவும் கூறுகிறார் கருப்புடையார்.
காமராஜருடன் பயணித்த அந்தக்கால நினைவுகளை பற்றி கருப்புடையார் கூறியதாவது:-
காமராஜர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் படிப்பறிவு இல்லாத மக்கள் அதிகம் பேர் இருந்தார்கள். இதனால், அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக தொடக்கக்கல்வி வழங்க வேண்டும் என நீண்ட காலமாக காமராஜர் நினைத்து கொண்டு இருந்தார்.
இதனை செயல்படுத்தும் வகையில் ஏழை, எளியவர். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என எல்லோருக்கும் கல்வி-இலவச கல்வி பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் இலவச மதிய உணவு-சீருடைகள், இப்படி பல திட்டங்களை தீட்டி அமல்படுத்தினார். அதிகம் படிக்காத காமராஜர் கல்விக்கு செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவை.
ஒவ்வொரு கல்வி ஆண்டின் இறுதியிலும், அதாவது மே மாதத்தில் தமிழகம் முழுவதும் இருந்து காமராஜருக்கு ஏராளமான கடிதங்கள் வரும். ஒவ்வொரு கடிதத்தையும் தனது கையாலே பிரித்து படிப்பார்.
இந்த கடிதங்கள் அத்தனையும் பள்ளி குழந்தைகளால் அனுப்பப்பட்ட கடிதங்கள்தான். இந்த கடிதங்களில். 'ஐயா... நாங்கள் மிகவும் ஏழைகள். எங்களுக்கு நோட்டு, புத்தகம் வாங்க கூட பணம் இல்லை. நீங்கள் போன வருடம் அனுப்பிய பணம் எங்களுக்கு உதவியாக இருந்தது. இந்த ஆண்டும் நோட்டு, புத்தகம் வாங்க பணம் தேவைப்படுகிறது. அனுப்பி வையுங்கள் ஐயா...' என்பது போன்ற வாசகங்கள்தான் இருக்கும்.
இந்த கடிதங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து பள்ளி திறப்பதற்கு 10 நாட்கள் இருக்கும்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு அனுப்பி மணியார்டர் மூலம் பணத்தை குழந்தைகளுக்கு அனுப்பி விடுவார்.
காமராஜர் வெளியூர் கூட்டத்திற்கு செல்லும்போது, அந்த கூட்டத்தின் முன் பகுதியில் குழந்தைகள் வந்து அமர்ந்து விடுவார்கள். கூட்டம் முடியும் தருவாயில் குழந்தைகளை பார்த்து 'டேய் பசங்களா எல்லோரும் பள்ளிக்கூடம் போய் படிக்கிறீர்களா? என்று கேட்பார்.
குழந்தைகள், 'ஆமாங்க ஐயா...' என்பார்கள். 'எல்லோரும் நல்லா படிக்கணும், படிச்சாத்தான் கல்லூரிக்கெல்லாம் போய் படிக்கலாம். நல்ல வேலை எல்லாம் கிடைக்கும். சரியாக படிக்கவில்லையென்றால் மாடு மேய்க்கணும். கூலி வேலைக்கு போகணும். ஆகவே, எல்லோரும் நல்லா படிக்கணும்' என்பார் காமராஜர்,
கூட்டம் முடிந்து காமராஜர் மேடையை விட்டு கீழே இறங்கியதும் குழந்தைகள் அவரை சூழ்ந்து கொள்வார்கள். அவர்கள் தோள் மீது கையை வைத்து கொண்டு “நீ என்ன படிக்கிற" என்று கேட்பார்.
இப்படி எல்லா குழந்தைகளையும் கேட்பார், அவர். காரில் ஏறி போகும்போது குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து கைகளை அசைத்து 'டாட்டா' சொல்வார்கள். இதைப்பார்த்ததும், காமராஜர் பூரித்து போவார். சிரித்துக்கொண்டே, காமராஜரும் கைகளை அசைத்து 'டாட்டா' காட்டியபடியே அங்கிருந்து செல்வார். இதையெல்லாம். நான் நேரில் பார்த்தவன். இப்போது. இதை நினைத்தாலும் எனக்கு பூரிப்பாகவே இருக்கும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் என்றால் கூட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. அவரது பேச்சில் சிரிப்பும் இருக்கும். சிந்தனையும் இருக்கும். தற்போது அவருக்கு வயது 90 ஆகிறது. அவர் கூட காமராஜரின் உதவியால்தான் படித்து முன்னேறியதாக சொல்வார்.
குழந்தைகளின் கல்விக்கு எது தடையாக இருக்கிறது? என்பதை தனக்கு குழந்தைகள் அனுப்பிய கடிதம் மூலம் தெரிந்து கொண்ட காமராஜர், அனைவருக்கும் இலவச தொடக்கக்கல்வி என்ற திட்டத்தின் மூலம் எண்ணற்ற ஏழை குழந்தைகளுக்கு ஏணிப்படியாக இருந்தார். அவரது பிறந்தநாள் ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுவது சாலப்பொருத்தமானது.