கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டி மற்றும் அது தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் (POSH Act) பிரிவு 16-ன் கீழ், இந்த வழக்கு தொடர்பான தகவல்களையும் பதிவுகளையும் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியிட நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்திருந்தது.
இந்த வழக்கு தொடர்பாகத் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த உதயநிதி ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர் உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவித்ததாகவும், உயர்நீதிமன்றத் தடையை மீறிப் பேசியதாகவும் அரசுத் தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு முறையிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள உள்விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, தவறான கருத்துகளை எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டு வருவதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
அரசுத் தரப்பு முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி வி. லட்சுமிநாராயணன், உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி மற்றும் அது தொடர்பான வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்க உத்தரவிட்டார். மேலும், உயர்நீதிமன்ற உத்தரவை மீறியிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.