தலைப்புச்செய்திகள்

26/11 பயங்கரவாதத் தாக்குதல் நினைவிடம்.. மார்கோ ரூபியோவுக்கு வரலாற்றை நினைவூட்டிய ஜெய்சங்கர்!

மும்பையில் உள்ள பிரபல தாஜ் ஹோட்டல் பாதுகாப்புத் தலைவரான சுனில் குதியாடியை மார்கோ ரூபியோவிற்கு அறிமுகம் செய்து வைத்த ஜெய்சங்கர், அவரை பேச அனுமதித்தார்.

பயங்கரவாத விவகாரத்தில் இந்தியா தனது பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை விட்டுக்கொடுக்காது என்பதையும், தற்காத்துக் கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு உண்டு என்பதையும் ஜெய்சங்கர் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

இந்தியாவிற்கு மூன்று நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மும்பையில் உள்ள 26/11 பயங்கரவாதத் தாக்குதல் நினைவிடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்தத் தாக்குதலின் கொடூரங்களை நேரில் கண்ட ஒருவரின் மூலமாகவே அமெரிக்க அமைச்சருக்கு வரலாற்றை விளக்கச் செய்தது இந்தியாவின் மிகச்சிறந்த ராஜதந்திர நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

மும்பையில் உள்ள பிரபல தாஜ் ஹோட்டல் பாதுகாப்புத் தலைவரான சுனில் குதியாடியை மார்கோ ரூபியோவிற்கு அறிமுகம் செய்து வைத்த ஜெய்சங்கர், அவரை பேச அனுமதித்தார். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் தாஜ் ஹோட்டலை எவ்வாறு கிட்டத்தட்ட 60 மணி நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்பது குறித்து ரூபியோவிடம் அவர் விரிவாக விவரித்தார்.

அந்தத் தாக்குதலின் போது சமையலறையில் பலியானவர்கள் குறித்தும், வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 166 பேர் உயிரிழந்த சோகம் குறித்தும் கமாண்டோ நடவடிக்கைகளின் விவரங்களையும் சுனில் குதியாடி எடுத்துரைத்தார். ஆயுதமேந்தாத நிலையிலும் தனது புத்தி கூர்மையால் காவல்துறை மற்றும் கடற்படை கமாண்டோக்களுக்கு உதவிகரமாக இருந்து பல உயிர்களைக் காப்பாற்றியதில் சுனில் குதியாடியின் பங்கு மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் நிலைப்பாடு

டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் பாகிஸ்தானுடன் வர்த்தகம் மற்றும் ராஜதந்திர உறவுகளை மேம்படுத்த முயன்று வரும் தற்போதைய சூழலில், இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. பாகிஸ்தானுடன் உறவு வைத்திருப்பது பிராந்திய விவகாரங்களைக் கண்காணிக்க உதவும் என்று மார்கோ ரூபியோ அண்மையில் கருத்து தெரிவித்து இருந்த நிலையில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் வலியை அமெரிக்க உயர்மட்ட அதிகாரியை நேரில் உணரச் செய்ய இந்தியா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது. பயங்கரவாத விவகாரத்தில் இந்தியா தனது பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை விட்டுக்கொடுக்காது என்பதையும், தற்காத்துக் கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு உண்டு என்பதையும் ஜெய்சங்கர் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

SCROLL FOR NEXT