தலைப்புச்செய்திகள்

காரிஃப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியது மத்திய அரசு

ஜூன் மாதம் தொடங்கவுள்ள தென்மேற்கு பருவமழையில் 14 பயிர்களுக்கான குறைந்தபட்ச விலை உயர்த்தப்பட்டுள்ளது.

2026-2027ஆம் ஆண்டு சந்தைப்படுத்தல் பருவத்திற்காக 14 காரீஃப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை பொருளாதார அமைச்சரவை குழு நிர்ணயம் செய்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற குழுவில், ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழையுடன் தொடங்கும் காரிஃப் விதைகளுக்கு, பருவத்திற்கு முன்னதாகவே குறைந்தபட்ச ஆதார விலை திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சாதாரண ரக நெல் பயிற்களுக்கு குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்தப்பட்டு ரூ.2441 ஆகவும், முதல்தர நெல்லுக்கு ரூ.2461 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சூர்யகாந்தி விதைக்கு குவிண்டாலுக்கு ரூ.662 ஆகவும், பருத்திக்கு ரூ.557 ஆகவும், எள் விதைக்கு ரூ.500 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

நடுத்தரமான இழைப்பருத்தி குவிண்டாலுக்கு ரூ.8267 ஆகவும், நீண்ட இழைப்பருத்தி ரூ.8667 ஆகவும்; மேலும் எண்ணெய் வித்துக்களில் மஞ்சள் சோயாபீன் குவிண்டாலுக்கு ரூ.5708 ஆகவும், நிலக்கடலை ரூ.7517 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பருப்பு வகைகளில் துவரம் பருப்பு குவிண்டாலுக்கு ரூ.8450 ஆகவும், உளுந்து பருப்பு ரூ.8200 ஆகவும், பாசிப்பருப்பு ரூ.8780 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறுதானியங்களை பொறுத்தவரை சோளம் குவிண்டாலுக்கு ரூ.4023 ஆகவும், மால்டண்டி ரகம் ரூ.4073 ஆகவும்; மேலும் கரும்பு குவிண்டாலுக்கு ரூ.2900 ஆகவும், கேழ்வரகு ரூ.5205 ஆகவும், மக்காச்சோளம் ரூ.2410 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.