தலைப்புச்செய்திகள்

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விலக்கு அளிக்க அரசாணை: ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!

சாதி, மத மோதல்கள், காவல் மரணங்கள் மற்றும் போராட்டங்கள் தொடர்பான விவரங்களை இனி 'RTI' மூலம் பெற முடியாது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 24(4)-இன் கீழ் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை இந்த அரசாணையைப் பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் 'பொது (சட்டம் - ஒழுங்கு)த் துறை'யின் கீழ் உள்ள முக்கியத் தகவல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI Act, 2005) வரம்பில் இருந்து விலக்கி தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு, உணர்வுபூர்வமான வழக்குகள் மற்றும் உளவுத்துறை சார்ந்த பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பான தகவல்களை இனி பொதுமக்கள் அல்லது சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற முடியாது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 24(4)-இன் கீழ் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை இந்த அரசாணையைப் பிறப்பித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாநில அரசின் சிறப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த புதிய அரசாணைக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான முனைவர் எம். எச்.ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக உரிமை மறுப்பு

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதும், பொதுநலன் சார்ந்த தகவல்கள் மக்களுக்கு கிடைப்பதை சாத்தியமாக்குவதுமே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முதன்மை நோக்கமாகும். ‘சட்டம் - ஒழுங்கு’ என்ற காரணத்தைக் காட்டி, காவல் துறை தொடர்பான தகவல்களை ஒட்டுமொத்தமாக இந்தச் சட்டத்தின் வரம்பில் இருந்து நீக்குவது நியாயமற்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிப்படைத்தன்மை என்பது அரசு மக்களுக்கு அளிக்கும் சலுகை அல்ல, மாறாக அது மக்களின் அடிப்படை ஜனநாயகம் சார்ந்த உரிமையாகும். காவல் துறை நடவடிக்கைகளில் முழுமையான ரகசியத்தன்மையைப் பேண முயல்வது, அதிகார தவறுகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் வழிவகுக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தல்

பொதுமக்களின் தகவல் பெறும் உரிமையைப் பறிக்கும் வகையிலான இந்த புதிய உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ஜனநாயக அமைப்புகளின் வெளிப்படைத்தன்மையைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

SCROLL FOR NEXT