தலைப்புச்செய்திகள்

நூலகங்களில் ஊழல் செய்துவிட்டு திமுகவினர் எப்படி கூச்சமே இல்லாமல் நடமாடுகின்றனர்?- அமைச்சர் ராஜ்மோகன்

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது சிந்தனை தளம் மூலமாக பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதலில் நடந்த முறைகேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.

திருச்சி காமராஜர் அறிவுலகம் மற்றும் பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் திமுக அரசு மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்காகக் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தையில் எடுபடாத தரம் குறைந்த நூல்களும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் அவசரமாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் புத்தகங்களும் இந்த நூலகத்திற்காக அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக கண்டனங்கள் வலுத்துள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராஜ் மோகன், நூலகங்களில் புத்தக கொள்முதலில் ஊழல் செய்துவிட்டு திமுகவினர் எப்படி கூச்சமே இல்லாமல் நடமாடுகின்றனர். "அகல்விளக்கு பதிப்பகத்திற்கு கொள்முதல் ஆணை கொடுத்ததே திமுக அரசு தான். குப்பை போன்ற புத்தகங்களை வாங்கி நூலகங்களில் அடுக்கி வைத்துள்ளனர். இந்த குப்பை புத்தகங்களை திமுகவினர் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு வழங்குவார்களா?

அந்த புத்தகங்களை மீண்டும் அகல்விளக்கு பதிப்பகத்திடமே ஒப்படைத்து பணத்தை திரும்ப பெறுவோம். நூலகம் என்பது அறிவின் கோவில். அதிலேயே ஊழல் செய்துவிட்டு எந்தவித கூச்சமும் இல்லாமல் திமுகவினர் நடமாடுவது வெட்கக்கேடானது" என கூறினார். மேலும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு பணம் மீட்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒரே முகவரியில் 20க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள்

இந்த விவகாரத்தில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த விசாரணைகளில் சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஒரே ஒரு சிறிய முகவரியில் மட்டும் 'அகல்விளக்கு பதிப்பகம்' உட்பட இருபதுக்கும் மேற்பட்ட போலிப் பதிப்பகங்கள் இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருண் புத்தகாலயா, பல்லவ பதிப்பகம், ஓம் பிரசுரம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் இயங்கும் இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒரே நபரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு அரசு நூலகங்களுக்கான கொள்முதல் ஆணைகளை மொத்தமாகப் பெற்று முறைகேடில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைப்புகளை கண்டு மிரண்ட வாசகர்கள்

நூலகங்களுக்காக வாங்கப்பட்ட புத்தகங்களின் தலைப்புகள் கேட்போரைக் குழப்பும் வகையிலும் அதிர்ச்சியூட்டும் விதமாகவும் உள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. 'டைமிங் மேன்', 'சீரண மண்டல நோய்கள்', 'எனக்குள் நான்' போன்ற விசித்திரமான தலைப்புகளில் எந்தவிதமான தரக்கட்டுப்பாடுகளும் இன்றி நூல்கள் அச்சிடப்பட்டு நூலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அரசு நிதியை முறைகேடு செய்யும் நோக்கில் பெயரளவிற்குப் புத்தகங்களை அச்சிட்டு விநியோகித்துள்ள இந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

SCROLL FOR NEXT