திடீரென ஏற்பட்ட பட்டாசு புகைமூட்டத்தால் சென்னை விமான நிலையத்தின் இயல்பு வாழ்க்கை மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகையின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் காரணமாக ஏற்பட்ட தடித்த புகை மண்டலம் காரணமாக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகளவில் பட்டாசுகளை வெடித்ததால், மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுபாதை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் விமான ஓட்டிகளுக்குத் தேவையான பார்வைத்திறன் திடீரென குறைந்தது.
திடீரென ஏற்பட்ட இந்த புகைமூட்டத்தால் சென்னை விமான நிலையத்தின் இயல்பு வாழ்க்கை மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மொத்தம் 26 விமானங்கள் தாமதத்தை சந்தித்தன. இதில் வருகை தர வேண்டிய 11 விமானங்களும், புறப்பட வேண்டிய 15 விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டன. வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்த விமானங்கள் வானிலேயே நீண்ட நேரம் வட்டமடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ராய்ப்பூரில் இருந்து 156 பயணிகளுடன் சென்னைக்கு வரவிருந்த இண்டிகோ விமானம் (6E2002) இரவு 10:45 மணிக்கு தரையிறங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், விமானம் தரையிறங்கும் பகுதியில் குறைந்தபட்ச தேவையான 950 மீட்டர் பார்வைத்திறனுக்கு மாறாக, புகைமூட்டம் காரணமாக பார்வைத்திறன் சுமார் 900 மீட்டராகக் குறைந்திருந்தது. இதனைக் கண்ட விமானத்தின் பைலட், பாதுகாப்பான தரையிறக்கத்திற்கு வழி இல்லாததால் இரவு 11:15 மணியளவில் விமானத்தை பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பினார். பின்னர் அங்கு சில மணி நேரம் கழித்து நிலைமை சீரடைந்ததும், அந்த விமானம் மீண்டும் சென்னைக்கு வந்து பத்திரமாக தரையிறங்கியது.
விமான நிலைய வட்டாரங்களின் தகவல்பபடி, கடந்த ஆண்டு தீபாவளியின் போது 15 விமானங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டன மற்றும் எந்த விமானமும் வேறு விமான நிலையத்திற்குத் திருப்பி அனுப்பப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு பட்டாசு புகைமூட்டத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பாதிக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதுடன், விமானம் திசைதிருப்பப்பட்ட சம்பவமும் பயணிகளிடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. காற்று மாசு மற்றும் புகைமூட்டம் காரணமாக விமானப் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது.