இந்தியா முழுவதும் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
இதில் தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் அடங்கும்.
இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
புதுவையிலும் வேட்பாளர்கள் அறிவிப்பு செய்யப்பட்டு, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கு ஆதரவுக்கோரி த.வெ.க.விடம் கடிதம் வழங்கியுள்ளது இந்திய தேசிய காங்கிரஸ்.
தவெக தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்தை சந்தித்து புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் கடிதம் வழங்கினர்.
தட்டாஞ்சாவடியில் காங்கிரஸ் சார்பில் விநாயகம் நிறுத்தப்பட்டுள்ளார். முதலமைச்சர் ரங்கசாமி நின்று வெற்றிப் பெற்ற அத்தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் ஆதரவுக் கோரியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தவெக புதுச்சேரியில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.