தலைப்புச்செய்திகள்

அடிக்கடி முதுகுவலி வருகிறதா? உங்கள் தினசரி பழக்கவழக்கங்கள் தான் காரணம்!

நாள்பட்ட முதுகுவலியால் அவதிப்படுபவர்கள் எளிதில் எரிச்சலடைதல், மனச்சோர்வு மற்றும் கவலைக்கு ஆளாகின்றனர்.

இன்றைய நவீன காலகட்டத்தில், வயது வித்தியாசமின்றி பலரையும் பாதிக்கும் ஒரு பொதுவான ஆரோக்கியப் பிரச்சினையாக 'முதுகுவலி' உருவெடுத்துள்ளது.

தவறான வாழ்வியல் முறை, நீண்ட நேரம் அமர்ந்திருப்பது போன்ற பல காரணங்களால் இது ஏற்படுகிறது. முதுகுவலியின் பின்னணி, அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றிய விரிவாக பார்க்கலாம்.

முதுகுவலி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:

முதுகுவலி திடீரெனவோ அல்லது நீண்ட நாட்களாகத் தொடரும் நாள்பட்ட வலியாகவோ இருக்கலாம். இதற்கு முக்கிய காரணங்கள்.

தவறான உடல் நிலை:

கணினி முன் நீண்ட நேரம் குனிந்து அமர்ந்திருப்பது, குனிந்தவாறே மொபைல் போன் பயன்படுத்துவது. திடீரென அதிக எடையைத் தூக்குவது அல்லது உடலைத் தவறான கோணத்தில் திருப்புவதால் தசை நார்கள் பாதிக்கப்படுவது.

அடிமுதுகுத் தண்டுவடம் தேய்மானம்:

வயது முதிர்வு காரணமாக தண்டுவட எலும்புகளுக்கு இடையே உள்ள ஜவ்வு தேய்மானம் அடைவது அல்லது விலகுவது. வயிற்றுப் பகுதி மற்றும் முதுகுப் பகுதி தசைகள் பலவீனமாக இருப்பது. அதிகப்படியான மன அழுத்தம் உடலில் உள்ள தசைகளை இறுக்கமடையச் செய்து வலியை உண்டாக்கும்.

அதுமட்டுமல்லாமல் இரவில் நிம்மதியான தூக்கம் இல்லாமல் போவது, இதனால் உடல் சோர்வு அதிகரிப்பது போன்ற காரணங்களால் கூட முதுகுவலி அதிகரிக்கும்.

நரம்புப் பாதிப்புகள்:

நாள்பட்ட முதுகுவலியால் அவதிப்படுபவர்கள் எளிதில் எரிச்சலடைதல், மனச்சோர்வு மற்றும் கவலைக்கு ஆளாகின்றனர். தண்டுவட ஜவ்வு விலகி நரம்புகளை அழுத்தும்போது, கால்களில் மரத்துப்போன உணர்வு அல்லது கடுமையான மின்சாரப் பாய்ச்சல் போன்ற வலி ஏற்பட்டு கடும் சிரமத்தை சந்திக்க நேரிடும்.

முதுகுவலிக்கான தீர்வுகள் மற்றும் தடுப்பு முறைகள்:

பெரும்பாலான முதுகுவலிகளை எளிய வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் முறையான பராமரிப்பு மூலம் குணப்படுத்த முடியும்.

வெப்பம் அல்லது குளிர் ஒத்தடம்:

தசைப்பிடிப்பு ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்கு ஐஸ் ஒத்தடமும், அதன் பிறகு தசைகளை தளர்த்த வெந்நீர் ஒத்தடமும் கொடுக்கலாம்.

முறையான ஓய்வு:

கடுமையான வலி இருக்கும்போது சில நாட்கள் அதிக உழைப்பைத் தவிர்த்து ஓய்வெடுக்க வேண்டும். ஆனால், நீண்ட நாட்கள் படுத்த படுக்கையாக இருக்கக் கூடாது; அது தசைகளை மேலும் பலவீனமாக்கும்.

சரியான நிலையை பேணுதல்:

அமரும்போதும், நிற்கும்போதும் முதுகை நேராக வைத்திருக்க வேண்டும். கணினியில் வேலை செய்பவர்கள் தகுந்த நாற்காலிகளைப் பயன்படுத்த வேண்டும்.

முறையான உடற்பயிற்சி:

முதுகுத் தசைகளை வலுப்படுத்தும் எளிய உடற்பயிற்சிகள் மற்றும் யோகாசனங்களை (உதாரணமாக: புஜங்காசனம், மர்ஜரியாசனம்) தினமும் செய்ய வேண்டும்.

சீரான உடல் எடை:

உடல் எடை அதிகரிக்கும் போது அது அடிமுதுகில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே எடையைக் கட்டுப்பாட்டில் வைப்பது அவசியம்.

எடை தூக்கும் முறை:

தரையிலிருந்து பொருட்களைத் தூக்கும்போது முதுகை வளைக்காமல், முழங்கால்களை மடக்கி அமர்ந்து தூக்க வேண்டும்.

முதுகுவலியுடன் சேர்த்து கால்களில் பலவீனம், மரத்துப்போதல், சிறுநீர் கழிப்பதில் கட்டுப்பாடு இல்லாமை அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், தாமதிக்காமல் உடனடியாக ஒரு தகுதிவாய்ந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.