செய்திகள்

நெல்லையில் நாளை முதல் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டி

நெல்லையில் நாளை முதல் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டி தொடங்குகிறது. நெல்லை சங்கர்நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன மைதானத்தில் ஒரு அரைஇறுதி மற்றும் 8 ‘லீக்’ ஆட்டம் ஆக மொத்தம் 9 போட்டிகள் நடக்கிறது.

நெல்லை:

தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 24-ந்தேதி தொடங்கியது. சென்னை, நத்தம், நெல்லை ஆகிய 3 இடங்களில் இந்தப் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. சென்னை, நத்தத்தில் இந்தப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

நெல்லையில் நாளை (செப்டம்பர் 1-ந்தேதி) முதல் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டி தொடங்குகிறது. நெல்லை சங்கர்நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன மைதானத்தில் ஒரு அரைஇறுதி மற்றும் 8 ‘லீக்’ ஆட்டம் ஆக மொத்தம் 9 போட்டிகள் நடக்கிறது.

நெல்லையில் நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- திருவள்ளூர் வீரன்ஸ் (மாலை 6.30 மணி) அணிகள் மோதுகின்றன.

அதைத்தொடர்ந்து 2-ந்தேதி கோவை-மதுரை அணிகளும் (மாலை 6.30 மணி), 3-ந்தேதி காரைக்குடி- தூத்துக்குடி அணிகளும் (பிற்பகல் 2.30 மணி), 4-ந்தேதி திண்டுக்கல்- தூத்துக்குடி அணிகளும் (மாலை 6.30 மணி), 5-ந்தேதி காஞ்சி-திருவள்ளூர் அணிகளும் (பிற்பகல் 2.30 மணி) மோதுகின்றன.

5-ந்தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கோவை அணிகளும், 13-ந்தேதி கோவை- திண்டுக்கல் அணிகளும் (பிற்பகல் 2.30 மணி), 14-ந்தேதி காஞ்சி- காரைக்குடி அணிகளும் (மாலை 6.30 மணி) மோதுகின்றன. முதல் அரைஇறுதி ஆட்டம் 16-ந்தேதி (மாலை 6.30 மணி) நடக்கிறது. நாளைய போட்டிக்கு முன்பு மாலை 5.30 மணிக்கு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இந்த போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு (டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு மட்டும்) இலவச பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து 4 முறை ரசிகர்கள் அழைத்து வரப்படுவார்கள். மதியம் 2.30 மணிக்கு நடைபெறும் போட்டிக்கு பகல் 12 மணி, 12.30 மணி, 1 மணி, 1.30 மணிக்கும், மாலை 6.30 மணிக்கு நடக்கும் போட்டிக்கு மாலை 4 மணி, 4.30 மணி, 5 மணி, 5.30 மணிக்கும் மினி பஸ்சில் ரசிகர்கள் அழைத்து வரப்படுவார்கள். போட்டி முடிந்த பிறகு 21 மினி பஸ்களிலும், 8 பஸ்களிலும் ரசிகர்கள் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

SCROLL FOR NEXT