சென்னை:
இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 461 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 42 சுங்கச் சாவடிகள் உள்ளன. ஆண்டு தோறும் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் சுங்கச் சாவடி கட்டணங்கள் உயர்த்துப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள 22 சுங்கச் சாவடிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள 20 சுங்கச் சாவடிகளில் நாளை (1-ந்தேதி) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
கோவை கன்னியூர், திருத்தணி பட்டறை பெரும்புதூர், சூரப்பட்டு, வானகரம், விழுப்புரம் பரனூர், சேலம் ஆத்தூர், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி சாலைப்புதூர், வேலூர் பள்ளிகொண்டா, வாணியம்பாடி, நெல்லை எட்டூர் வட்டம், கப்பலூர், நாங்குனேரி, புதுக்கோட்டை, திருச்சி சிட்டம்பட்டி, மதுரை பூதக்குடி, சிவகங்கை லெம்பலாக்குடி, லட்சுமணப்பட்டி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம் சென்னசமுத்திரம் ஆகிய 20 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
52 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையில் ஒருமுறை செல்ல கார், ஜீப், வேன் ஆகியவற்றுக்கு ரூ.55-ல் இருந்து ரூ.60 ஆக கட்டணம் உயர்த்தப்படுகிறது. இலகு ரக வர்த்தக வாகனம், இலகு ரக சரக்கு வாகனம், மினிபஸ் ஆகியவற்றுக்கு ரூ.90-ல் இருந்து ரூ.95-ஆக உயர்த்தப்பட உள்ளது.
லாரி, ஆம்னிபஸ்களுக்கு ரூ.190-ல் இருந்து ரூ.195 ஆகவும் 3 ஆக்ஸில் வர்த்தக வாகனங்களுக்கு ரூ.205-ல் இருந்து ரூ.215 ஆகவும், கனரக வாகனங்களுக்கு ரூ.295-ல் இருந்து ரூ.305 ஆகவும், பெரிதாக்கப்பட்ட வாகனங்களுக்கு ரூ.360-ல் இருந்து ரூ.375 ஆகவும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
அதாவது ஒருமுறை செல்ல கட்டணம் குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.15 வரை உயருகிறது. ஆனால் ஒரே நாளில் திரும்பி வரும் கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயருகிறது.