போரூர்:
மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 490 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 44 சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுக்கு ஒருமுறை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள 22 சுங்கச்சாவடிகளின் கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை வானகரம், சூரப்பட்டு, பரனூர், ஸ்ரீபெரும்புதூர், சென்னசமுத்திரம், பட்டரை பெரும்புதூர், எஸ்.வி.புரம், திண்டிவனம், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, மதுரை கப்பலூர், பூதக்குடி, திருச்சி சிட்டம்பட்டி, விருதுநகர், எட்டூர்வட்டம், நாங்குநேரி, கோவை கன்னியூர், சிவகங்கை, லெட்சுமணப்பட்டி, வெலம்பாலக்குடி, செண்பகம்பேட்டை, வேலூர் பள்ளிகொண்டா, தூத்துக்குடி வாகைகுளம், சாலைப்புதூர் ஆகிய 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 5 முதல் 15 வரை சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை வானகரம் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்களுக்கு ஒருமுறை செல்வதற்கான கட்டணம் ரூ. 40 எனவும், ஒரே நாளில் திரும்பி வரும் கட்டணம் ரூ. 60 ஆகவும் உள்ளது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இலகுரக வர்த்தக வாகனம், இலகுரக சரக்கு வாகனம் மற்றும் மினி வேன் ஒருமுறை செல்வதற்கு ரூ. 65 கட்டணம் உள்ளது. இதிலும் மாற்றம் செய்யப்படவில்லை. ஒரே நாளில் திரும்பி வரும் கட்டணம் ஏற்கனவே ரூ. 95 ஆக இருந்தது. இது ரூ. 5 அதிகரித்து ரூ. 100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பஸ் மற்றும் 2 ஆக்சிப்ஸ் டிரக் வாகனம் ஒருமுறை செல்ல ஏற்கனவே ரூ. 135 கட்டணம் இருந்தது. இது ரூ. 5 அதிகரித்து ரூ. 140 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் திரும்பி வரும் கட்டணம் ஏற்கனவே ரூ. 200 ஆக இருந்தது. இது ரூ.10 உயர்த்தப்பட்டு ரு.210 ஆக அதிகரித்துள்ளது.
3 ஆக்சில் வர்த்தக வாகனங்கள் ஒரு முறை செல்லும் கட்டணம் ரூ.145-ல் இருந்து ரூ.155 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.220-ல் இருந்து ரூ.230 ஆக அதிகரித்துள்ளது.
கனரக கட்டுமான மிஷன்கள், எர்த் மூவீஸ் உபகரணங்கள், மல்டி ஆக்சில் வாகனங்கள் ஒருமுறை செல்லும் கட்டணம் ரூ.210-ல் இருந்து ரூ.220 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.15 அதிகரித்து ரூ.315-ல் இருந்து ரூ.330 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பெரிதாக்கப்பட்ட வாகனங்கள் 7 அல்லது அதற்கு மேற்பட்ட ஆக்சில் உள்ள வாகனங்கள் ஒரு முறை செல்லும் கட்டணம் ரூ.255-ல் இருந்து ரூ.265 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.385-ல் இருந்து ரூ.400 ஆக அதிகரித்துள்ளது.
சுங்கச்சாவடி கட்டணம் அதிகரிக்கப்பட்டிருப்பது தொடர்பாக வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
செந்தில் (புளியந்தோப்பு):-
நான் மினிவேன் டிரைவராக உள்ளேன். தனியார் பார்சல் நிறுவனத்திற்கு வாகனம் ஓட்டி வருகிறேன். தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று முறை தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது ஆகவே இந்த கட்டண உயர்வால் பெரிதும் பாதிப்படைகிறேன். ஒருமுறை கட்டணம் செலுத்தி ஒரு நாள் முழுவதும் சென்று வர அனுமதிக்க வேண்டும். மேலும் சுங்கச்சாவடிகளை அரசு அகற்றப் போவதாக கூறியிருந்தது அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முனியசாமி (ராமநாதபுரம்):- நான் லாரி டிரைவராக பணிபுரிகிறேன். சென்னை-மதுரைக்கு லாரி இயக்கி வருகிறேன். தொடர்ந்து சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்து கொண்டே வருகிறது. டீசல் விலையும் அதிகரித்துவிட்டது.
இன்சூரன்ஸ் கட்டணம் ஏறிவிட்டது. ஆனால் எங்கள் லாரி வாடகை கட்டணம் மட்டும் கடந்த 5 ஆண்டுகளாக உயர்தப்படவில்லை. இதனால் எங்களுக்கு பெரும் பாதிப்பு எங்களுக்கு மட்டும் தான்.
எழிலரசன் (வந்தவாசி):-
நான் லாரி டிரைவராக உள்ளேன். தினந்தோறும் மீஞ்சூரில் இருந்து செங்கல்பட்டிற்கு சிமெண்ட் லோடு ஏற்றி செல்கிறேன் ஏற்கனவே ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளால் தொழில்கள் பெரிதும் பாதிப்பு அடைந்து உள்ளது இதுபோக சுங்கச்சாவடி கட்டணம் என்ன காரணத்திற்காக அடிக்கடி உயர்த்தப்படுகிறது என்றே தெரியவில்லை சுங்கச்சாவடியில் உள்ள ஊழியர்கள் துரிதமாக செயல்படுவது கிடையாது. இதனால் நேரம் தான் வீணாகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #TollGate