சென்னை:
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தனது கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் கொரோனா வைரசால் உயிர் இழந்துள்ளனர். கொரோனாவின் கோரத் தாண்டவம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலும் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகி பலியாகி உள்ளனர். தமிழகத்திலும் 2,400-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிர் இழந்து உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 84 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், சென்னையில் கட்டிடங்கள் கட்டும் பணி, ஓட்டல் பணி, அழகு நிலையங்கள் உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த வடமாநில கூலித் தொழிலாளிகள் பெரும்பாலானோர் சிறப்பு ரெயில்கள் மூலம் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் சென்று விட்டனர். இதே போன்று, சென்னையில் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தவர்களில் பலர் வேலை இழந்து சொந்த ஊரைத் தேடி பயணம் மேற்கொண்டு விட்டனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தவர்கள் பலர் தினசரி தங்கள் சொந்த ஊரை தேடி சென்று கொண்டு இருக்கின்றனர். பலர் வாடகை மற்றும் ஒத்தி வீடுகளில் இருந்து தங்களது கட்டில், பீரோக்கள், மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு லாரிகள் மூலமாகவும் சொந்த ஊரை நோக்கி பயணம் செய்து வருகின்றனர்.
தற்போது, ‘இ-பாஸ்’ பெற முடியாமல் பலர் சொந்த ஊருக்கு பயணம் செய்ய வழி தெரியாமல் தவித்து வருகின்றனர். எனவே, மாவட்டம் விட்டு மாவட்டங்கள் செல்ல ‘இ-பாஸ்’ தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டால், சொந்த ஊர்நோக்கி பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். இவ்வாறு சொந்த ஊர்களை நோக்கி பயணம் செய்தவர்களால் அவர்கள் குடியிருந்து வந்த வீடுகள் தற்போது காலியாக கிடக்கின்றன.
இந்த வீடுகளின் முன் ‘டூ-லெட்’ (வாடகைக்கு) பதாகைகள் தொங்கிய படி உள்ளன. முன்பு, சென்னையில் குடியேறுவதற்கு வீடு தேடி குறைந்தது ஒரு மாதமாவது அலைந்து திரிந்தால் தான் வீடுகளை வாடகைக்கு பெற முடியும். ஆனால், தற்போது எங்கு பார்த்தாலும் ‘டூ-லெட்’ பதாகைகள் தொங்குகின்றன. ஆனால், வீடுகளில் குடியேற யாரும் வந்தபாடு இல்லை என்று வாடகைகுடியிருப்புகள் சொந்தக்காரர் ஒருவர் கூறினார்.