செய்திகள்

தூத்துக்குடியில் இன்று பிளம்பர் வெட்டிக்கொலை: 3 பேர் கும்பல் வெறிச்செயல்

தூத்துக்குடியில் இன்று அதிகாலை வீடு புகுந்து பழிக்குப்பழியாக பிளம்பரை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கணேசன் மகன் அம்பிகாபதி (வயது 48). திருமணமாகாத இவர் பிளம்பர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இன்று காலை இவரது வீட்டிற்குள் புகுந்த 3 பேர் கும்பல் தூங்கி கொண்டிருந்த அம்பிகாபதியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி விட்டது. இதில் தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்ட அம்பிகாபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர் சிறிது நேரத்தில் கொலையாளிகள் ரத்தம் சொட்ட சொட்ட தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையான அம்பிகாபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து சரண் அடைந்த 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. அதன் விபரம் வருமாறு:-

முத்துக்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மாயாண்டி. இவருக்கும் கொலையான அம்பிகாபதிக்கும் தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மாயாண்டி மனைவி செண்பகவள்ளிக்கும் அம்பிகாபதிக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அம்பிகாபதி கடந்த 9-1-17 அன்று செண்பகவள்ளியை வெட்டிக்கொலை செய்தார். இதில் கைதான அவர் தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

இந்நிலையில் செண்பகவள்ளியின் அண்ணன் பாளையங்கோட்டை கோட்டூர் ரோட்டை சேர்ந்த செந்தில்குமார் (39), உறவினர்கள் பிச்சையா (51), இசக்கிமுத்து (30) ஆகியோர் அம்பிகாபதியை வெட்டிக்கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர். அதன்படி கடந்த ஒரு மாதமாக அடிக்கடி 3 பேரும் தூத்துக்குடி வந்து அம்பிகாபதியின் நடமாட்டத்தை கண்காணித்துள்ளனர்.

இந்நிலையில் தான் அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த அம்பிகாபதியை வெட்டிக்கொலை செய்துள்ளனர். கைதான செந்தில்குமார் அளித்த வாக்குமூலத்தில் ‘சிறுவயது முதலே நான் எனது தங்கை செண்பகவள்ளி மீது அதிக பாசம் வைத்திருந்தேன். அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதை என்னால் ஜீரணிக்கமுடியவில்லை.

இதனால் உறவினர்களுடன் சேர்ந்து அம்பிகாபதியை வெட்டிக்கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து போலீசார் 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாமீனில் வந்தவர் பழிக்குப்பழியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews