முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் திரும்ப பெற்றனர்.
இது தொடர்பாக அவர்கள் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் கொடுத்தனர். பின்னர் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், கருணாஸ் ஆகியோரும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர்.
இதையடுத்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
அவர் நடவடிக்கை எடுக்காததால் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு எம்.பி.க்கள் நேரில் சந்தித்து முறையிட்டனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 21 பேருடன் சென்று கவர்னரை சந்தித்தார். ஏற்கனவே அளித்த மனுக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கவர்னரிடம் கேட்டார்.
அரசுக்கு எதிராக அந்த கட்சியினரே முதல்வரை மாற்ற வேண்டும் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கடிதம் கொடுத்ததால் நடவடிக்கை எடுக்க முடியாது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கவர்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன், முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் இன்று மாலை 5 மணிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவை சந்திக்க உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்த உள்ளனர்.