செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க ரூ.14 கோடி மதிப்பீட்டில் பணிகள்: கலெக்டர்

வறட்சி காலத்தில் ஊரக மற்றும் நகர் பகுதிகளின் குடிநீர் பற்றாக்குறை சரி செய்வதற்காக ரூ.14.16 கோடி மதிப்பில் 1058 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறதாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, மண்டலமாணிக்கம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் நடராஜன் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

பொது மக்களுக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாழ்வாதார திட்டங்கள், கிராம மேம்பாட்டிற்கான வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வறட்சி காலத்தில் ஊரக மற்றும் நகர் பகுதிகளின் குடிநீர் பற்றாக்குறை சரி செய்வதற்காக ரூ.14.16 கோடி மதிப்பில் 1058 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஊரக பகுதிகளின் குடிநீர் தேவைக்காக ரூ.9.64 கோடி மதிப்பில் 893 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2016-17-ம் நிதியாண்டில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் 25156 தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. 2017-18-ம் நிதியாண்டில் 52371 தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டிட திட்டமிடப்பட்டுள்ளது. 185 கிராம ஊராட்சிகள் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற கிராம ஊராட்சிகளாக மாற்றப்பட்டுள்ளன.

இந்த நிதியாண்டில் மீதமுள்ள 244 கிராம ஊராட்சிகளிலும் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக மாற்றிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 6075 நபர்களுக்கு வீடுகள் கட்டித்தர திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 509 பயனாளிகளுக்கு பசுமைவீடுகள் கட்டித்தர பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு கிராம சபைகளில் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ளது.

தாய் திட்டத்தின் கீழ் ரூ.8.22 கோடி மதிப்பில் 42 சிறு பாசன கண்மாய்கள் தூர்வாரவும், ரூ.8.46 கோடி மதிப்பில் 27 சாலை பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ.3 கோடி மதிப்பில் 10 இடங்களில் அம்மா பூங்கா மற்றும் அம்மா ஜிம் அமைக்கப்படவுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் 117 கோடி மனித சக்தி வேலை நாட்கள் பயன்படுத்தப்பட்டு ரூ.202.41 கோடி ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டில் இதுவரையில் ரூ.143 கோடி மதிப்பில் 69.77 லட்சம் மனித சக்தி வேலை நாட்கள் ஏற்படுத்திட திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்லத்துரை, கமுதி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.