சென்னை:
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக நாள்தோறும் பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சி கலாச்சாரத்தை சீரழிப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமலஹாசனை கைது செய்ய வேண்டும் எனவும் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, நடிகர் கமல்ஹாசன் நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். இந்த சந்திப்பின் போது தமிழக அரசின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்த அவர், அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாக கூறினார்.
சிஸ்டம் சரியில்லை என்று தான் ஒரு வருடத்திற்கு முன்பே தெரிவித்ததாகவும், அதனை தற்போது ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வழிமொழிகிறார்கள் என்றும் கூறினார்.
இந்நிலையில், தான் நடத்தும் நிகழ்ச்சி பிரபலமடைய தமிழக அரசின் மீது சேற்றை வாரி வீசுவதா என்று நடிகர் கமல்ஹாசனுக்கு நிதியமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், சிஸ்டம் சரியில்லை என்பதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டமே சரியில்லை என கமல் சொல்ல வருகிறாரா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.