செய்திகள்

இப்போ லிச்சி பழம் சாப்பிடலாமா சாப்பிடக்கூடாதா?

லிச்சி பழம் சாப்பிட்டால் மூளைக்காய்ச்சல் வரும் என்ற தகவல் வலைதளங்களில் வைரலாகியுள்ளது. உண்மையில் இதை சாப்பிடலாமா, சாப்பிடக்கூடாதா என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

மாலை மலர்

பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது. இதில் பாதிக்கப்பட்டு இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்துள்ளனர். அரசு அறிவிப்பின் படி அக்யூட் என்சபிலிட்டிஸ் அல்லது ஜப்பானிஸ்  என்சபிலிட்டிஸ் தான் இத்தனை உயிரிழப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குழந்தைகளை தாக்கி உயிரழப்புகளை ஏற்படுத்தியதற்கு லிச்சி பழம் உட்கொள்வது முக்கிய காரணம் என்ற வகையில் தகவல் பரவுகிறது. இதுபற்றி ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில், "மக்கள் லிச்சி பழத்தை சாப்பிட வேண்டாம், குழந்தைகளுக்கு இந்த பழத்தை கொடுக்க வேண்டாம். இந்த பழம் சாப்பிடுவதால் குழந்தைகளின் உயிரை காவு வாங்கும் காய்ச்சலுக்கு காரணம்." என அதில் கூறப்பட்டுள்ளது. 

இதே தகவல் ஃபேஸ்புக் வீடியோவாகவும் பரவி வருகிறது. வைரலாகும் இந்த வீடியோவில், "லிச்சி பழத்தை யாரும் சாப்பிட வேண்டாம். குழந்தைகளுக்கும் இந்த பழத்தை கொடுக்க வேண்டாம். இதனை அவர்களுக்கு கொடுத்தால் அவர்களுக்கு மூளை காய்ச்சல் நோய் ஏற்படும். மத்திய சுகாதார அமைச்சகம் இந்த நோயை சரி செய்ய முடியாது என அறிவித்துவிட்டது" என கூறப்படுகிறது.  

சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் உண்மை தானா என்ற வகையில் ஆய்வு செய்ததில், குழந்தைகள் உயிரிழப்புக்கும் லிச்சி பழம் சாப்பிடுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. உண்மையில் இந்த மூளை காய்ச்சல் வர பல்வேறு காரணிகள் இருப்பதாக மருத்துவர்கள் மற்றும் மத்திய சுகாதார மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சகம் சார்பில் லிச்சி பழம் சாப்பிடுவதால் பாதிப்பு வரும் என இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

முசாபர்பூர் மாவட்டம் லிச்சி பழத்திற்கு பெயர்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இந்த காலக்கட்டத்தில் லிச்சி பழங்கள் அறுவடை செய்யப்படும். 1995 ஆம் ஆண்டு இதேபோன்ற மூளை காய்ச்சல் காரணமாக பலர் உயிரிழந்தனர். உடனே பல்வேறு ஊடகங்கள் உயிரிழப்புக்களை லிச்சி பழத்துடன் ஒப்பிட்டு செய்தி வெளியிட்டன.

இவ்வாறு வெளியான செய்திகளில் அமெரிக்கா மற்றும் இந்தியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வினை மேற்கோள் காட்டியிருக்கின்றனர். இந்த ஆய்வில் முசாபர்பூரில் பரவிய மூளை காய்ச்சல் ஏற்பட ஹைபோகிளைசின் ஏ மற்றும் எம்.சி.பி.ஜி. டாக்சிட்டி உட்கொண்டது காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த இரு இரசாயனங்களும் லிச்சி பழத்தில் அதிகம் நிறைந்து இருக்கிறது. 

இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை இரவு நேரத்தில் குறைக்கும். இதனால் லிச்சி பழம் உட்கொள்வதை குறைத்தால் மூளை காய்ச்சலில் இருந்து தப்பிக்கலாம் என கூறப்பட்டது.  

வங்கதேசம் மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், இந்திய அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்கு முற்றிலும் முரணாக அமைந்தது. இவர்கள் வெளியிட்ட அறிக்கையில் லிச்சி பழத்திற்கும் மூளை காய்ச்சலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும், உயிரிழப்புகளுக்கு தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளே காரணம் என தெரிவிக்கப்பட்டது. 

மத்திய சுகாதார மையம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைகளில், குழந்தைகளின் உயிரிழப்புகளுக்கு, ஊட்டச்சத்து குறைபாடு, கடும் வெயில் உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம் என்று தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புக்கும் லிச்சி பழம் உட்கொள்வது பற்றியும் சுகாதார மையம் சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

குழந்தைகள் உயிரை பறிக்கும் மூளை காய்ச்சலுக்கான காரணத்தை மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களே இன்னும் கண்டறியவில்லை. அந்த வகையில் லிச்சி பழம் உட்கொள்வதால் தான் மூளை காய்ச்சல் ஏற்படுகிறது என்ற வாக்கில் பரவும் தகவல்களில் துளியும் உண்மையில்லை.

எவ்வித ஆதாரமும் இன்றி பரப்பப்படும் போலி செய்திகள் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. பல சமயங்களில் போலி செய்திகளால் பலர் உயிரிழிந்துள்ளனர். இதனால் போலி செய்திகளை எதிர்கொண்டால் அவற்றை பரப்பாமல் இருப்பது அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க வழி செய்யும்.