சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம் தவிர பிற பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான புதிய தகுதி நிபந்தனைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ஒருவர் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதோ, பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்பதோ கட்டாயமில்லை.
புதிய விதிகளின் அடிப்படையில் தனியார் கல்லூரியிலோ, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலோ ஒருவர் 20 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் அதை மட்டுமே வைத்துக்கொண்டு துணைவேந்தராகிவிட முடியும். இது பல்கலைக்கழகங்களை சீர்குலைக்கும் தன்மை கொண்டதாகும்.
பல்கலைக்கழக மானியக்குழு விதி 7.3.0 பிரிவில், “உச்சப்பட்ச திறமை, நம்பகத்தன்மை, நெறிகள், அமைப்பின் மீதான உறுதிப்பாடு ஆகியவற்றைக் கொண்டவர்கள் மட்டுமே துணைவேந்தர்களாக நியமிக்கப்பட வேண்டும். பல் கலைக்கழகங்களில் பேராசிரியராக 10 ஆண்டுகளோ அல்லது புகழ்பெற்ற ஆராய்ச்சி அமைப்புகள், கல்வி நிர்வாக அமைப்புகளில் பேராசிரியருக்கு இணையான பதவியில் 10 ஆண்டுகளோ பணியாற்றிய தகைசால் கல்வியாளர்கள் மட்டுமே துணைவேந்தர்களாக நியமிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மாறாக, தமிழக அரசின் புதிய விதிகளின்படி துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டால், அது பல்கலைக்கழகங்களை தனியாரிடம் அடகுவைப்பதற்கு சமமானதாகிவிடும்.
எனவே, துணைவேந்தர்கள் நியமனத்திற்கான புதிய தகுதி விதிகளை நீக்கி விட்டு பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.