சென்னை:
டிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2ஏ தேர்வு மோசடி வழக்கில் இன்னொரு முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இடைத்தரகர் ஜெயக்குமார் போலீசில் பிடிபடாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அவர் பற்றி தகவல் தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று சி.பி. சி.ஐ.டி. போலீசார் அறிவித்தனர். ஜெயக்குமார் தமிழகத்தை விட்டு தப்பிச் சென்று இருக்கலாம் என்றே கருதப்பட்டது.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜெயக்குமார் இன்று சரண் அடைந்தார். இதையடுத்து டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணை நடைபெறும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயக்குமாரை நாளை ஆஜர்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதுவரை புழல் சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜெயக்குமார் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் தனக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி உள்ளார்.
எந்த ஆதாரமும் இல்லாமல் என் பெயரை கெடுக்கும் நோக்கில் இந்த வழக்கில் காவல்துறை செயல்படுகிறது. மக்களிடம் நன்மதிப்பைப் பெறுவதற்காக பொய் குற்றச்சாட்டுகளை போலீசார் சுமத்தி உள்ளனர் என்றும் ஜெயக்குமார் தனது மனுவில் கூறி உள்ளார்.